கோபல்ல கிராமம்

கோபல்ல கிராமம், கி.ராஜநாராயணன், காலச்சுவடு பதிப்பகம்.

நன்றாக தூங்குபவனுக்கு இரு மனைவிகளாம்! மூத்த எழுத்தாளர் கி.ராஜநாராயணன் எழுதிய ‘கோபல்ல கிராமம்’ நூலை சமீபத்தில் படித்தேன். காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ளது. ‘கோபல்ல கிராமம்’ உண்மை சம்பவமா, நாவலா, வரலாற்று பதிவா என, என்னால் பிரித்து பார்க்க முடியாத அளவுக்கு, அனைத்தும் கலந்த கலவையாக உள்ளது. இஸ்லாமிய மன்னர்களுக்கு பயந்த, ஆந்திராவிலிருந்து தமிழகத்தில் குடியேறியோர் பற்றியது அந்த நூல். தமிழகத்தின் ஒரு பகுதியில் குடியேறி, அங்கு விவசாயம் செய்து, வீடுகள் கட்டி வாழ்ந்த, கோபல்ல கிராம மக்களின் பண்பாடு, கலாசாரம், குடும்ப வாழ்வு ஆகியவற்றை யதார்த்தமாக கி.ரா. சித்தரிக்கிறார். அதில் வரும் ஒவ்வொரு பாத்திரமும், நம்முள் சிலிர்ப்பை ஏற்படுத்துகிறது. கோபல்ல கிராமத்துக்கு தீவட்டி கொள்ளையர்களின் அச்சுறுத்தல் இருந்து வருகிறது. கொள்ளையர்கள் வசம், அரிவாள், கத்தி போன்ற ஆயுதங்கள் உள்ளன. கொள்ளையர்கள் வீடுகளுக்குள் நுழையாமல் இருக்க, மக்கள் விடுகள் முன் தானியங்களை கொட்டி வைத்துவிட்டு கூரைகளின் மீது உட்கார்ந்துகொண்டு, கல்லால் தாக்குகின்றனர். இத்தாக்குதலுக்காக சிலரை தயார் செய்தும் வைத்திருக்கின்றனர். நிலத்தை  உழ, இரு மாடுகளையும், ஒரு கலப்பையும் தான் பயன்படுத்துகிறோம். ஆனால், கோபல்ல கிராமத்தினர், இரு கலப்பைகளைக் கொண்டு நிலத்தை உழுதனர் என நூல் ஆசிரியர் கூறுகிறார். தாய்ப் பசுவை இழந்த கன்றை, மற்றொரு பசுவிடம் எப்படி சேர்க்கின்றனர் என்பது, சுவாரசியமான ஒன்று. இதற்காகவே சிலர் இருக்கின்றனர். கோபல்ல கிராமத்தினரின், குடும்ப வாழ்க்கையும், கி.ரா. விவரிக்கிறார். வாட்ட சாட்டமான ஒருவன். காலை முதல் மாலை வரை கடுமையாக உழைத்துவிட்டு வந்து, ஆழ்ந்து தூங்கிவிடுகிறான். அவனுக்கு இரு மனைவிகளாம். சிலரோ ஒரு நாளைக்கு ஐந்து முறை சாப்பிடும் பழக்கம் உள்ளவர்களாம். இப்படி வாழ்ந்து கொண்டிருந்த, கோபல்ல கிராம மக்கள், இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சி வந்ததும், என்ன ஆனார்கள், அவர்களிடம் ஏற்பட்ட மாற்றங்கள் என்ன என்பைதயும் நூலாசிரியர் கூறியுள்ளார். கி.ரா.வின் எழுத்து நடை, ஒரு கிராமத்தின் யதார்த்த வாழ்க்கை முறையை அப்படியே படம் பிடித்து காட்டுகிறது. அவரின் பல அரிய படைப்புகளில் ‘கோபல்ல கிராமம்’ முக்கியமானது. -பாக்யராஜ், இயக்குனர், நடிகர். நன்றி: தினமலர், 15/3/2015.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *