கோ.கேசவனின் திறனாய்வாளுமை
கோ.கேசவனின் திறனாய்வாளுமை, முனைவர் ஜெ. கங்காதரன், வையவி பதிப்பகம், பக். 264, விலை 150ரூ.
முப்பத்து மூன்று நூல்கள் படைத்து, தமிழ் திறனாய்வு உலகில் புகழ்க்கொடி நாட்டியவர் கோ. கேசவன். பேராசிரியராகவும், ஆய்வாளராகவும், திறனாய்வாளராகவும், தொழிற்சங்க வாதியாகவும் செயற்பட்ட அவரது திறனாய்வு முறைமைகளைத் திறம்பட ஆய்வு செய்கிறது இந்த நூல். தமிழ்த் திறனாய்வு வரலாற்றையும், அந்த வரலாற்றில் கோ.கேசவன் பெறும் இடத்தையும் சுட்டிக்காட்டி, மார்க்சிய இயங்குதளத்தில் அவரது திறனாய்வுக் கோணங்கள் அமைந்ததை அழகாக எடுத்துக்காட்டியுள்ளார் நூலாசிரியர். முனைவர் பட்ட ஆய்வு நூல் என்பதால், மேற்கோள்களின் மேல் எழுந்த கட்டமாக இந்த நூல் தோற்றமளித்தாலும், உள்ளுக்குள் நூலாசிரியரின் தனித்திறமைகளும் வெளிப்படுகின்றன. ஒரே சாதியிலுள்ள அனைவரும் ஒரே தொழிலைச் செய்து கொண்டிருந்த நிலை மாறி, நிலவுடைமை அமைப்பு, தமிழகத்தில் சிதறத் தொடங்கிய காலங்களில், ஒரே சாதிக்குள் பல தொழில்களைச் செய்யும் நிலையைக் காண்கிறோம். அதாவது ஒரே சாதிக்குள் பல வர்க்கங்கள் தோன்றிவிட்டன(பக். 180). -முகிலை ராசபாண்டியன். நன்றி: தினமலர், 8/11/2015.