சங்கீத மும்மணிகள்

சங்கீத மும்மணிகள், உவே. சாமிநாதையர், டாக்டர் உ.வே. சாமிநாதையர் நூல் நிலையம், பக். 292, விலை 180ரூ.

தமிழ்த் தாத்தாவும் இசையும் இசைக்கு இசையாத மனித மனம் ஏதுமில்லை. சாகாவரம் பெற்ற இசையும் இசைவாணர்களும் என்றென்றைக்கும் நினைக்கப்படுவார்கள். தமிழ்நாட்டைச் சேர்ந்த அப்படிப்பட்ட இசைவாணர்களைப் பற்றிய பதிவுகள் மிகவும் அரிது. அதுபோன்ற அரிதான பதிவுகளில் ஒன்றுதான் தமிழ்த்தாத்தாவின் ‘சங்கீத மும்மணிகள்’ நூல். தாத்தாவின் இசைப்பணி தமிழ் இலக்கியச் செல்வங்களைத் தேடித் தேடி சேகரித்த தமிழ்த்தாத்தா உ.வே. சாமிநாதையர் ‘கலைமகள்’ இதழில் எழுதிய இசை மேதைகள் மூவர் குறித்த வாழ்க்கை வரலாறும், அவர்களுடைய கீர்த்தனைகளும் ‘சங்கீத மும்மணிகள்’ எனும் நூலாக வெளிவந்துள்ளது. யாரந்த மும்மணிகள்? மும்மணிகளில் முதலானவர் புகழ் பெற்ற இசைப் புலவர் கிருஷ்ணையர். இசைத் துறையில் மிகக் கடினமான கன மார்க்கத்தில் சிறந்து விளங்கியதால், ‘கனம் கிருஷ்ணையர்’ என்றழைக்கப்பட்டவர். தமிழுலகத்தில் புதிய கிளர்ச்சியை ஏற்படுத்திய நந்தனார் சரித்திரக் கீர்த்தனையை இயற்றி கோபாலகிருஷ்ண பாரதியார் மும்மணிகளில் இரண்டாமவர். கர்நாடக சங்கீதத்தால் விளையும் இன்பத்தைப் பலரிடமும் கொண்டு சேர்த்த சங்கீத சிகாமணி மகா வைத்தியநாதையதே மூன்றாம் மும்மணி. உ.வே.சா.வுக்கும் இசைக்குமான தொடர்பு கோபாலகிருஷ்ண பாரதியாரிடம் இளைய வயதிலேயே சில காலம் சங்கீதப் பயிற்சி பெற்றவர் உ.வே.சா. இசைப் புலவர் கனம் கிருஷ்ணையர் உ.வே.சா.வின் பாட்டிக்கு தாய் மாமா உறவுக்காரர். மகா வைத்தியநாதையருடன் உ.வே.சா. பல காலம் நெருங்கிப் பழகியுள்ளார். இவ்வாறு மும்மணிகளுடன் ஏற்பட்ட தொடர்பே இந்நூலை எழுத உ.வே.சாவுக்குப் பெரும் தூண்டுதலாய் அமைந்திருக்கிறது. -மு.முருகேஷ். நன்றி: தி இந்து, 22/8/2015.

Leave a Reply

Your email address will not be published.