சமகால மலையாளக் கவிதைகள்

சமகால மலையாளக் கவிதைகள், தொகுப்பு-சுகத குமார், தமிழில்-சா. சிவமணி, சாகித்ய அகடமி, 433, அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சென்னை 600018, பக். 256, விலை 135ரூ.

மகாகவி ஜி. சங்கர குறுப்பு முதல் பாலச்சந்திரன் கள்ளிக்காடு வரையுள்ள கவிஞர்கள் 1950 முதல் 1980 வரை எழுதியுள்ள கவிதைகளிலிருந்து 56 கவிதைகள் இந்நூலுள் தொகுக்கப்பட்டுள்ளன. மலையாளக் கவிதைகளின் 30 ஆண்டுகால வரலாற்றின் பதிவுகள் இவை. இந்தக் கவிதைகளைப் படித்துப் பார்க்கும்போது புலப்படுவது. ஒரு மகா நதியின் பிரவாகச் சித்திரம். உயர்ந்த இமயமலைச் சிகரங்களில் இருந்து, பள்ளத்தை நோக்கி ஓடிவரும் ஆற்றின் பெருக்கு போல் தூய்மையும், அழகும், கம்பீரமும், கருணையும் உடையது அது என்று தொகுப்பாசிரியர் குறிப்பிட்டுள்ளார். சிவதாண்டவம் எனும் தலைப்பில் ஜி.சங்கர குறுப்பு எழுதுகிறார். கண் இமைத்து இமைத்துப் பார்த்துக் கொண்டிருக்கிறேன் அந்திப் பொழுதின் மனோகரமான சதாசிவனின் உச்சதாண்டவம் ஆலிலைத் தோணியில் ஊழிக்கலைப் பிராயக்கடலில் விளையாடும் ஓங்கார மூலமே என கதி என்று அவல் பொட்டலம் தலைப்பில் வி.கே. கோவிந்தன் நாயர் முத்திரை பதிக்கிறார். பொன்னின் வேதனை என்னும் தலைப்பில் நாராயணப் பணிகர் எழுதுகிறார். பொன்னைத்தட்டி மனமும் நினைவும் சுருங்கி வீழ்ந்து கிடக்கும் விதியின் வார்ப்படத்தில் இப்படி நிரம்ப நிரம்பப் படித்துச் சுவைத்து மகிழலாம். சாகித்ய அகடமி வெளியீட்டுத் தரம் பளிச்சென்று மிளிர்கிறது. -கவிக்கோ ஞானச்செல்வன். நன்றி: தினமலர், 16/6/2013.  

—-

அடிப்படைத் தமிழ் கிருபா வழிகாட்டி, எஸ். தியாகமணி, கருணா பதிப்பகம், கண்டிப்பேடு, வேலூர் 632106, பக். 279, விலை 175ரூ.

தமிழ்க் கல்வியைத் தமிழ் மொழிக் கல்வி, தமிழ் இலக்கியக் கல்வி என, இரண்டாகப் பிரித்துப் பார்த்தால், படித்தல், கேட்டல், பேசுதல், எழுதுதல் என்னும் நான்கு திறன்களை அடிப்படையாகக் கொண்டது. தமிழ் மொழியைக் கற்க விரும்பும், வேற்றுமொழி மாணாக்கர்கூட, எளிமையாகக் கற்றுக் கொள்ளும் வகையில் உருவாக்கியுள்ளார் நூலாசிரியர். ஓரெழுத்து ஒரு மொழி என்னும் தலைப்பில் அ (அழகு), ஆ(பசு), ஏ(அம்பு), கா(சோலை) இப்படி, 42 ஓரெழுத்துக்களைக் கொண்ட தமிழின் சிறப்பையும் விவரித்துள்ளார். ஒலிக்குறிப்புகள், எழுத்து வகைகள், வடிவங்கள் என, விவரமாக விளக்கப்பட்டுள்ள இந்நூலில், நாற்றம் (பேடுஸ்மெல்), என்னும் (பக். 34), சூ என்ற எழுத்தை டூச் என்று உச்சரிக்கும் வகையில் (பக். 38) குறிப்பிட்டிருப்பதும், இப்படிச் சில தவறுகளும் உள்ளன. மொத்தத்தில், தமிழ் மொழியைக் கற்றுக் கொள்ள நல்ல வழிகாட்டி நூல் என்றே கூறலாம் -பின்னலூரான். நன்றி: தினமலர், 16/6/2013.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *