சமயங்கள் சமுதாய அடிப்படை மாற்றத்திற்காகவே

சமயங்கள் சமுதாய அடிப்படை மாற்றத்திற்காகவே, (அடித்தட்டுக் கண்ணோட்டத்தில் சமய நல்லுறவு உரையாடல்), ஆங்கில மூலம் ஆ. அலங்காரம், தமிழில் அ. அந்தோனி குருசு, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்,  சென்னை, விலை 180ரூ.

அனைத்து சமயங்களிலும் உள்ள சாதி, வர்க்க ஏற்றத் தாழ்வுகளை கொடுமைகளைப் போக்க சமயங்களின் மூலமாகவே என்ன செய்ய வேண்டும்? என்று ஆராயும் நூல். விவேகானந்தர் தன்னுடைய சீடர்களிடம், ஏழைகளுக்கும் துன்புறுவோர்களுக்கும் பணி செய்வதே உங்கள் தொழில். அதில் சாதி அல்லது நிறவேறுபாடு பார்க்கவும் கூடாது என்று கூறியிருப்பது எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. சாதி அடிப்படையிலான முன் தீர்மானமுள்ள எந்த அடையாளமும் கிறிஸ்தவர்களுக்கு இடையில் இருப்பது கிறிஸ்துவுக்கு எதிரான அறிகுறியாகிறது என்று கருதும் நூலாசிரியர், தலித்துக்கள் சாதி (சமூகம்), வர்க்கம் (பொருளாதாரம்) ஆகிய இருமுனைகளிலும் ஒடுக்கப்பட்டனர். அதுவே விடுதலைக்கான இலக்காகி, தலித் இறையியலுக்கான தேவையை நியையப்படுத்தியது என்கிறார். அனைத்து சமயத்தினரும் வழிபடும் வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை ஆலயம், நாகூர் ஆண்டவர் தர்கா, மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயில் ஆகியவை சமயபுத்தெழுச்சி வடிவங்கள் என்கிறார் நூலாசிரியர். மக்கள் நாடிச்செல்லும் மூன்று திருத்தலங்களிலும் அனைத்து மக்களும் அணிதிரண்டு வந்து ஒன்றுசேர்ந்து கடவுளைத் தொழ முடிகிறது என்பது, எந்தச் சாதியினராக இருந்தாலும், எந்த மதத்தவராக இருந்தாலும், எந்தக் கொள்கையைக் கடைப்பிடிப்பவரானாலும், அரவானியர் உள்ளிட்ட எந்தப் பாலினரானாலும் இவ்வாறான சமய வடிவங்களின் புத்தெழுச்சி, அனைத்துச் சாதி சமய இருபாலாரிடையே சமத்துவத்தைப் பிரகடனம் செய்கிறது என்ற கருத்து, தெளிவாக முன் வைக்கப்படுகிறது. சிந்தனையைத் தூண்டும் நூல். நன்றி: தினமணி, 16/2/2015.

Leave a Reply

Your email address will not be published.