சமுதாயப் பார்வையில் மணிமேகலை

சமுதாயப் பார்வையில் மணிமேகலை, கே. ஜீவபாரதி, ஜீவா பதிப்பகம், பக். 216, விலை 110ரூ.

மணிமேகலையின் முன் கதையாகிய சிலப்பதிகார ஆராய்ச்சியில் தொடங்கிப் பதிகமும், வஞ்சிக் காண்டமும், இளங்கோவடிகளால் இயற்றப்படவில்லை எனக்காட்டி, இளங்கோவுக்கு கண்ணகி கதையை சொன்னவர் சாத்தனார் என்பது சரியா என வினவி, மணிமேகலை படைத்த சாத்தனாரும், சங்கத்துச் சீத்தலைச் சாத்தனாரும் ஒருவரல்லர் என, நிறுவிச் செல்கிறது இந்த நூல். பசிப்பிணி அறுத்த பாத்திரமான மணிமேகலையைச் செதுக்கியுள்ள பாங்கினை, வியந்து விதந்து சொல்கிறது. பொதுவுடைமைச் சிந்தனையாளராகிய நூலாசிரியர், தம் கருத்திற்கேற்பச் சமுதாயப் பணியை, மணிமேகலை தன்னலம் துறந்து ஆற்றிய திறத்தைப் பாராட்டுகிறார். பிச்சை எடுத்தபோது கிடைத்த உணவை தான் உண்ணாமல், கூன், குருடு, செவிடு, நொண்டி எனக் குறைபாடு உடையவர்களையும் பசிப்பிணியால் வாடுவோரையும் தேடிப்பிடித்து, அவர்களின் பசியாற்றியபின் மீதியிருப்பதை உண்ணும் ஆபுத்திரனுக்கு அமுதசுரபி கிடைத்து. பின்னர் மணிமேகலைக்கு அந்தப் பேறு வாய்த்தது. பெண்கள், அந்தக் காலத்திலும் எப்படி பாதுகாப்பின்றி இருந்தார்கள், காலம்காலமாக ஆண்களின் சிந்தனையோட்டம் எப்படித் தடுமாறியது என்பன பற்றி எல்லாம், விரித்து எழுதி உள்ளார். பொது வாழ்க்கையில் ஈடுபடுபவர்களும், ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களும் தங்களுடைய சேவையை தேவையானர்வகைள் கண்டறிந்து அவர்களுக்குச் செய்ய வேண்டும் என்பது வலியுறுத்தப்படுகிறது. சிலம்புச் செல்வர், ம.பொ.சி., தொ.மு.சி. ரகுநாதன், மயிலை சீனி வேங்கடசாமி, சாமி. சிதம்பரனார் நூல்கள் இந்நூலுக்கு நிரம்பவும் பயன்பட்டுள்ளன. படித்துப் பயன்கண்டு, ஆராய்ச்சி மனப்பாங்கை வளர்த்துக் கொள்ள மிகவும் பயன்படும் நூல் இது. -கவிக்கோ ஞானச்செல்வன். நன்றி: தினமலர், 10/8/2014.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *