சமூகம் வலைத்தளம் பெண்
சமூகம் வலைத்தளம் பெண், தி. பரமேசுவரி, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், பக். 220, விலை 180ரூ.
பெண்கள் குறித்தும், தமிழர்களது வாழ்வுரிமை, தேசியம், வரலாறு, மாட்சிமை, பெருமை குறித்தும், முந்தைய, இன்றைய வாழ்வியல் நிலை குறித்தான கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல். இதில், தன்மை, முன்னிலை, படர்க்கை என்ற பிரிவுகளின் கீழ், 32 தலைப்புகளில் கட்டுரைகள் இடம் பெற்றள்ளன. பெண் படைப்பாளிகளின் பங்கு குறித்து முழுவதுமாய் ஆராய்ந்திருக்கிறார் நூலாசிரியரும், ம.பொ.சி.யின் பேத்தியுமான தி. பரமேசுவரி. கட்டுரைகள் அனைத்தும் கட்டுரையாளரின் சுய கருத்தின் அடிப்படையிலும், வேறு சிலரின் கட்டுரைகளுக்கு மறுப்பாகவும் இணையத்தில் எதிர்வினையாற்றிய வகையிலும் எழுதப்பட்டவை. பெண்கள் தினம், பெண்ணெழுத்து, பெண் படைப்பாளிகள், வரலாற்றிலும் இதிகாசத்திலும் பெண்களின் பங்கு, பெண் மீதான கருத்தியல் தாக்குதல்கள் என, சமகாலச் சூழலை சுட்டிக்காட்டி நீள்கிறது, கட்டுரைகளின் அணிவகுப்பு. உ.பி.,பீகார் மாநிலங்களின் சில கிராமங்களில் இப்போதும் கூட ஒரு வீட்டில், பெண் குழந்தை பிறந்தால் ஒரு மாமரம் நடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர் (பக். 192) போன்ற செய்திகள், இன்றைய சூழலில் முன்னெடுத்து செல்ல வேண்டியவை. -ஸ்ரீநிவாஸ் பிரபு. நன்றி: தினமலர், 11/1/2015.
—-
பேஸ்புக் பொண்ணு, அதிஷா, உயிர்மை பதிப்பகம், பக்.120, விலை 100ரூ.
இணைய உலகின் கவுண்டமணியாக அறியப்பட்ட அதிஷாவின் எழுத்துக்கள், நையாண்டியும், தீவிர அரசியலும் கொண்டவை. இந்த நூல் அவரது முதல் தொகுப்பு. பல்வேறு இதழ்களில் வெளியான கதைகள், இந்த தொகுப்பில் அடங்கி உள்ளன. எளிமையும் சரளமும் சுவாரசியமும் கைவரப்பெற்ற அதிஷா மாதிரியான எழுத்தாளர் பலர் உருவாவதன் வழியாகத்தான், வாசிக்கும் பழக்கத்தை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வது சாத்தியமாகிறது என்று தோன்றுகிறது என்ற பாஸ்கர் சக்தியின் முன்னுரை, புத்தகத்தின் தன்மையை எடுத்துரைக்கிறது. நன்றி: தினமலர், 11/1/2015.