சல்மா எழுதிய சாபம்( சிறுகதைகளின் தொகுப்பு )
சாபம், சல்மா, காலச்சுவடு பதிப்பகம், 669, கே.பி.சாலை, நாகர்கோவில்1, பக். 142, விலை 110ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-801-2.html
சல்மா எழுதிய 11 சிறுகதைகளின் தொகுப்பு இந்நூல். எழுத்திற்கு ஆண் பெண் பேதமில்லை என்ற போதிலும் இத்தொகுப்பில் உள்ள சிறுகதைகளை பெண் ஒருவராலேயே எழுத முடியும் என்பதே உண்மை. கதாப்பாத்திரங்கள் நிறைய மௌனங்களைச் சுமந்து கொஞ்சமாகவே வார்த்தைகளை பிரசவிக்கிறார்கள். பெண்கள் பல துறைகளில் கால் ஊன்றி ஆண்களுக்கு நிகராகப் பரிணமித்தாலும், நடைமுறை வாழ்வில் அவர்கள் மிகுந்த வலியையும் வேதனையையும் சுமப்பவர்களாகவே இருக்கிறார்கள். அவற்றை மிக அழுத்தமாய் சித்தரிக்கும் இக்கதைகளில் பெண்களின் மௌனமும் யாருமற்ற அண்டவெளியில் அவர்கள் தனிமைப்பட்டு நிற்பதும் வாசிப்பவருக்கு வலியை ஏற்படுத்துகிறது. இதில் முத்தாய்ப்பாக வலி என்ற சிறுகதையில் அவளும் அவனுமே கதைகளை நகர்த்துகின்றனர். அவர்கள் யார்? பெயர் என்ன? என்ற கேள்விகளுக்குள் நம்மை போக விடாமல் அந்த வேதனையை மட்டுமே நம்மை உணரச்செய்கிறார். இத்தொகுப்பிலுள்ள சிறுகதைகள் வெவ்வேறான காலகட்டத்தில் எழுதப்பட்டாலும் அவற்றை ஒருசேர படிக்கும்போது ஒன்றுக்கொன்று தொடர்புடையவையாக இருக்கின்றன. மனத்தின் மிக நுட்ப போராட்டங்களையும், சிக்கலாகிவிட்ட ஆண் பெண் உறவின் சுமுகமற்ற புரிதலையும் மிக அனாயாசமாக கடந்து செல்கிறது இச்சிறுகதைத் தொகுப்பு. இச்சிறுகதை தொகுப்பை படிக்காதவர்களுக்கு இந்தா பிடி (படி) சாபம் என்று கையில் கொடுக்கலாம். நன்றி: தினமணி, 15/4/2013.
—-
விதையினைத் தெரிந்திடு, வலம்புரி லேனா, எழில் மீனா பதிப்பகம், முதன்மைச் சாலை, திருவாலம்பொழில் 613103. பக். 168, விலை 140ரூ.
எழுத்தார்வமும் சமூக அக்கறையும் உள்ளவர்கள் தங்களை வெளிப்படுத்திக் கொள்ளும் முயற்சிகளில் ஒன்றே சிற்றிதழ்கள் நடத்துவது. சிற்றிதழ்கள் நடத்தும்போது ஏற்படும் பொருள் இழப்புகள், வேதனைகள், இடர்கள் அதிகம். அவை எல்லாவற்றையும் மீறி கட்டுக்கடங்காத ஆர்வத்துடன் தொடர்ந்து நடத்தவே சிற்றிதழாளர்கள் முயல்கிறார்கள். சிலர் தொடர்ந்து நடத்திக் கொண்டும் இருக்கிறார்கள். இருபத்தைந்தைக்கும் மேற்பட்ட சிற்றிதழ் நடத்தியவர்களின் இப்படிப்பட்ட அனுபவங்கள் கட்டுரை வடிவில் இந்நூலில் தொகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளன. சிற்றிதழ் நடத்துவதற்கு வெவ்வேறுவிதமான ஆர்வங்களும், இலட்சியங்களும் காரணங்களாக இருப்பதை இத்தொகுப்பில் உள்ள கட்டுரைகளைப் படிக்கும்போது தெரிந்து கொள்ளமுடிகிறது. பின்னாட்களில் மிகச் சிறந்த இலக்கியப் படைப்புகளை எழுதியவர்கள் பலர். ஆரம்ப காலத்தில் சிற்றிதழ்களில் எழுதியவர்களாக இருந்திருக்கிறார்கள். பெரிய இதழ்களை ஆதரிப்பவர்களைப் போலவே சிற்றிதுழ்களை ஆதரித்து ஊக்குவிப்பவர்களும் இருக்கிறார்கள் என்பன போன்ற பல செய்திகளை அறிய முடிகிறது. சிற்றிதழ்களைப் பற்றிய சிறப்பான பதிவு. நன்றி: தினமணி, 15/4/2013.