சாட்சியற்ற போரின் சாட்சியங்கள்
சாட்சியற்ற போரின் சாட்சியங்கள், ஃபிரான்ஸிஸ் ஹாரிசன், தமிழில்: என். கே. மகாலிங்கம், காலச்சுவடு பப்ளிகேஷன்ஸ், 669, கே. ப். சாலை, நாகர்கோவில், விலை ரூ. 250. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-797-0.html
பிணத்தை மறக்கலாம்… பிணவாடையைத் துடைக்க முடியாது. ஈழம் இப்போது இப்படித்தான் இருக்கிறது. அலைச்சத்தம் கேட்ட அந்தத் திசையில் கொலைச் சத்தம் கேட்க வைத்தது சிங்கள இனவாதம். ‘பயங்கராவாதிகளுக்கு எதிரான போர்’ என்று , அப்பாவிகள் அனைவரையும் கொன்று தீர்த்தனர். 2007 -ம் ஆண்டு முதல் மகிந்த ராஜபக்ஷே அரங்கேற்றிய அராஜகத்தை அன்று ஐ.நா.சபையும் உலக நாடுகளும் வேடிக்கை பார்த்தன. ஆனால், மனசாட்சி ஏற்படுத்திய உறுத்தல் காரணமாக இன்று உலகக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்படும் நிலைமைக்கு ராஜபக்ஷேவுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்த நெருக்கடி ஏற்படுத்தும் எழுத்துக்களைப் பதிவுசெய்தவர்கள் மேரி கெல்வின், கார்டன் வைஸ், ஃபிரான்ஸிஸ் ஹாரிசன் போன்றோர். சில தமிழ்த் தேசியவாதிகளின் கற்பனை என ஈழப் பிரச்சனை முடக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டபோது, இது இந்தியாவின் பிரச்னை மட்டுமல்ல , உலக மனித இனத்தின் பிரச்சனை என்பதை உரக்கச் சொன்னவர்கள் இவர்கள்தான். பி. பி. சி. செய்தி நிறுவனத்தில் பணியாற்றிய ஃபிரான்ஸிஸ் ஹாரிசன் என்ன்ற ஈரானியர், ஈழக்கொடுமைக்கான நேரடிச் சாட்சியங்களைத் தேடினார். மகிந்தாவின் குண்டுகளில் இருந்து தப்பிப் பிழைத்த ஈழத் தமிழர்களை அவரது கண்கள் தொடர்ந்து தேடின. ரத்தம் உறைந்து, உயிர்க்கூட்டின் ஒவ்வொரு நரம்பும் துடிக்கும் அந்தக் காலகட்டத்தை லோகீசன் (ஊலகவியலாளர்), நீரோன் (மருத்துவர்), சகோதரி இக்னேஷியஸ் (கன்னியாஸ்திரி), உமா (ஆசிரியை), உஷா (போராளித் தாய்), கோபன் (தன்னார்வுத்தொண்டர்), நேயரின் (போராளி) ஆகியோரின் நேரடி வாக்குமூலங்களாகவே தருகிறார். ஒவ்வொருவருமே, ‘காலா என் அருகே வாடா… உன்னை மோதி மிதிக்கின்றேன்… முகத்தில் உமிழ்கின்றேன்’ இன்று வாழும் வரலற்றுப் பாத்திரங்கள். போன் கீ மூன் வரும்போது போர் நடந்த சுவடுகளை ராஜபக்ஷே அழித்திருக்கலாம். ஆனால், இன்றும் உயில் வாழும் சாட்சியங்கள் இவர்கள். சோகத்தை மட்டுமல்ல, தன்னுடைய தீர்க்கமான கோபத்தையும் ஃபிரான்ஸிஸ் இந்தப் புத்தகம் முழுவதும் பதிவுசெய்துள்ளார். மகிந்தாவைவிட ஐ.நா- வையும் உலக நாடுகளையும்தான் இவர் அதிகம் குற்றம்சாட்டுகிறார்.”2011-ம் ஆண்டு ஜூன் மாதம் இலங்கை ராணூவம் தம் காட்டுமிராண்டித்தனமான உத்திகளை மற்ற ராணூவத்தினருக்குக் கற்பிக்க, மூன்று நாள் மாநாடு ஒன்றை நடத்தியது. அந்தப் போர் குற்றத்தின் துர்நாற்றம் மறையும் முன்பே 40 நாடுகள் தங்கள் பிரதிநிதிகளை அதில் கலந்துகொள்ள அனுப்பின. அதில் அமெரிக்காவும் கலந்துகொண்டது” என்று பொட்டென்று அடிக்கிறார். “ஐ.நா. பொதுச் செயலரின் சிறப்புப் பிரதிநிதியான விஜய நம்பியார், இலங்கையிலிருந்த ஐ.நா..பணியாளர்களுக்கு ‘அதிகக் கவனத்தை ஈர்க்காமல் இருக்கும்படியும்’, அரசாங்கத்துடன் இயைந்து போக வேண்டும் ’ என்றும் சொல்லி இருந்தார்” என்று அம்பலப்படுத்துகிறார். ஐ-நா- வால் தம் பணியாளர்களைகூட பாதுகாக்க முடியவில்லை என்று கொட்டு வைக்கிறார். ’தமிழ் மக்களைப் பாதுகாக்காமல்விட்ட ஐ.ந.வின் தோல்வி, மொத்த உலக நாடுகளின் பாரா முகத்தின் ஓர் அறிகுறியே’ என்ற முடிவுக்கும் வருகிறார். ‘நான் மீண்டும் அங்கே போய் போர் செய்யத் த்யார்’ என்ற போராளியையும்,’சுதந்திரமாக இருக்க முடியுமானால் சகாராப் பாலைவனத்தில் வாழத் தயார்’ என்று சொல்லும் ஆசிரியையும் நினைத்தால், தமிழனாய்ப் பிறந்த பெருமை பூக்கும்! நன்றி: ஜூனியர் விகடன் (17.3.2013)
