சான்றோர் கவி
சான்றோர் கவி, முனைவர் அ. பாண்டுரங்கன், சேகர் பதிப்பகம், 66, பெரியார் தெரு, எம்.ஜி.ஆர். நகர், சென்னை 78, பக். 192, விலை 120ரூ.
ஆராய்ச்சி எண்ணமுடையோர்க்கு ஆர்வத்தை ஊட்டும் வகையில் அமைந்த ஆய்வுக்கட்டுரைகள் ஏழினைக் கொண்டது இந்நூல். ஆய்வரங்கங்களில் படிக்கப்பட்ட கட்டுரைகளையும், ஆய்விதழ்களில் வெளியிடப்பட்ட கட்டுரைகளையும் செம்மைப்படுத்தி, தொகுத்து வெளியிட்டுள்ள ஆசிரியரை பாராட்டலாம். சங்க இலக்கியங்கள், சிலப்பதிகாரம், பக்தி இலக்கியங்கள் ஆகியவற்றில் நூலாசிரியர் ஆய்வு செய்துள்ள முறை சிறப்பானது. எட்டுத்தொகை நூல்களை படிக்க விழைபவர்களுக்கு, முதல் நான்கு கட்டுரைகள் வழிகாட்டியாய் அமைந்துள்ளன. இளங்கோவடிகள் சமண சமயத்தை போற்றுவததோடு, திருமால், கொற்றவை, முருகன் ஆகிய கடவுளரைப் பாடிப்போற்றும் திறம் அவரை, சமயங்களைக் கடந்த சர்வ சமய ஞானியாய் காட்டுகிறது என்பதை நூலாசிரியர் சிறப்பாக விளக்கியுள்ளார். சிலப்பதிகாரத்தை படித்த மனநிறைவு உண்டாகிறது. ஆழ்வார்களின் பாசுரங்கள், திருமுறை நூல்களான தேவாரம், திருவாசகம் ஆகியவை பக்தியை வெளிப்படுத்துவதுடன், நாயகன் நாயகி முறையினை வெளிப்படுத்துகின்றன என்பதை எடுத்துக்காட்டுகளுடன் விளக்குகின்றார். இதை படித்து, இலக்கிய அறிவை வளர்த்துக்கொண்டு பயனடையலாம். -ம. நா. சந்தான கிருஷ்ணன்.
—-
யார் கட்டுவது பூனைக்கு மணி?, முஹித் சித்தீக்கி, தமிழில்-ந. வினோத் குமார், விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை 2, பக். 216, விலை 90ரூ.
வியாபாரம் தொடர்பான செயல்திட்டத்தை உருவாக்குதல், அத்திட்டத்தை நிர்வகித்தல், அத்திட்டத்தை செயல்படுத்த தகுதியானவர்களை தேர்ந்தெடுத்தல், பணியாளர்களின் திறனை மேம்படுத்துதல், முறையான செயல்பாடு எனும், ஐந்து வகையான மேலாண்மை சிந்தனைகளை இந்நூல் முன்வைக்கிறது. ஒரு நிறுவனத்தை நிர்வகிக்கும் பொறுப்பு உள்ளவர்கள், இப்புத்தகத்தை படித்துவிட்டு நிர்வகித்தால், தன் நிர்வாகத்தில் ஏற்படும் மாற்றத்தை எளிதில் அறிந்துகொள்வர். படைப்பாற்றல் என்பது, இலக்கியவாதிக்கு இருக்க வேண்டியது மட்டுமல்ல. நிர்வாகிக்கும் இருக்க வேண்டியது என்பதை இந்நூல் எடுத்துரைக்கிறது. -முகிலை ராசபாண்டியன்.‘ நன்றி: தினமலர் 18/12/2011.