சிறுகதைகளும் குறுநாவல்களும்
சிறுகதைகளும் குறுநாவல்களும், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், 41பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை 98, விலை 185ரூ. To but this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-959-0.html
உலகப் புகழ் பெற்ற ரஷிய எழுத்தாளர் அந்தோன் சேகவ். பிற்போக்கு சிநத்னைகள் மேலோங்கியிருந்தபோது அவற்றுக்கு எதிராக குரல் கொடுத்தவர். எழுத்துக்களுக்கு உயிர் கொடுத்தவர். மனித மனங்களை ஊடுருவிப் பார்க்கும் உளவியல் படைப்பாளர். அவர் எழுதிய சிறுகதைகளும், குறுநாவல்களும் ஆக ஒன்பது கதைகள் இந்த நூலில் இடம் பெற்றுள்ளன. மேலிடம் என்றதும் பல்லைக் காட்டும் மனோபாவத்தை நயம்பட எடுத்துரைத்து நகைக்கிறது பச்சோந்தி என்னும் கதை, மற்றொரு கதை இயோனிச். இது இளம் வயதில் நகருக்கு வந்து வேலை ஏற்கும் ஒரு டாக்டரின் கதை. இக்கதை மனித ஆன்மா சிறுகச் சிறுக நலமிழந்து மரத்துப் போவதைக் காட்டுகிறது. மணமகள் என்னும் கதை நாதியா என்றொரு நங்கையின் கதையைக் கூறுகிறது. கேசுவின் கதைகள் படிப்போரைக் கலங்கச் செய்கிறவை. துயரம் தோய்ந்த புன்னகை புரிகிறவை. மென்மையானவை. மனித மாண்புக்குரிய வாழ்வை மலரச் செய்ய வேண்டுமென்ற ஊக்கத்தை அளிப்பவை. ரஷிய படைப்பை சிறப்பாகத் தமிழாக்கம் செய்திருக்கின்றனர் பூ. சோமசுந்தரமும், ரா. கிருஷ்ணையாவும்.
—-
ஆஸ்திரேலிய ஆதிவாசிக் கதைகள், தமிழ்க்குரல் பதிப்பகம், 10, புலிபோன் பஜார், 2வது சந்து, திருவல்லிக்கேணி, சென்னை 5, விலை 180ரூ.
ஆஸ்திரேலிய மண்ணின் மைந்தர்களான கறுப்பின ஆதிவாசிகளின் மரபுகளையும் பண்பாட்டையும் வெளிப்படுத்தும் குட்டிக் குட்டிக் கதைகளின் தொகுப்பு நூல். இக்கதைகள் மூலம் பழங்குடி தமிழர்களுக்கும் ஆஸ்திரேலிய ஆதிவாசகளுக்குமான பண்பாட்டுத் தொடர்புகளையும் ஆதிவாசிகளின் நம்பிக்கைகள், வாழ்க்கை முறைகள், வணக்க வடிவங்கள் ஆகியவற்றையும் அறிந்து கொள்ளலாம். ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழி மாற்றம் செய்திருக்கிறார் மாத்தளை சோமு. நன்றி: தினத்தந்தி, 18/12/13.