சுந்தர ராமசாமியின் தேர்ந்தெடுத்த கட்டுரைகள்
சுந்தர ராமசாமியின் தேர்ந்தெடுத்த கட்டுரைகள், ச. தில்லை நாயகம், சாகித்ய அகடமி, ரவீந்திரபவன், 35, பெரோஷா சாலை, டில்லி 110 001, பக். 304, விலை 155ரூ.
அறிஞர்களின் முக்கிய குணம் தெளிவு. என் ஆதாரமான குணம் சந்தேகம் (பக். 44). ஒரு எழுத்தாளன் என்ற முறையில் நான் எதற்கும் பூரண விசுவாசம் செலுத்துகிறவன் அல்ல. நடைமுறை அர்த்தப்படி கட்சிகள், அரசு, சமூகம், மதம், தேசம் இவற்றிற்கெல்லாம் பூரண விசுவாசகம் அளித்து விடக் கூடாது என்பதை, என் இலக்கியக் கொள்கையின் ஒரு பகுதியாக, நான் ஏற்றுக் கொண்டிருக்கிறேன் (பக். 65). இப்படி சுயதரிசனம் தரும் சுந்தர ராமசாமியின், 30 கட்டுரைகளை ஆளுமையும் ஆக்கங்களும், மதிப்பீடுகளும் எதிர் பார்ப்புகளும் படைப்பாளிகளும், படைப்புகளும், சமூக அரசியல் சிந்தனைகள் ஆகிய நான்கு தலைப்புகளில் தொகுத்து தரப்பட்டுள்ளது. கனவு மொழியிலிருந்து சிந்தனையின் மொழியே உருவாக்க முயல்பவர்கள்தான், உண்மையில் இன்றைய தமிழ்ப் படைப்பாளிகள் (பக். 109) என்று கூறும் எழுத்தாளர் சுந்தர ராமசாமி. சிந்தனைத் தெளிவும், எழுத்தில் யதார்த்தமும் கொண்ட சுராவின் ஒரு புளிய மரத்தின் கதை, ஜே.ஜே. சில குறிப்புகள் போன்ற நாவல்களும், அவர் நிறுவிய காலச்சுவடும் தமிழுக்கு வளம் சேர்ப்பவை. தேர்ந்த கட்டுரைகள் சிறப்பாக, இதில் இடம் பெற்றுள்ளன. -பின்னலூரான்.
—-
நமது சினிமா (1912-2012), சிவன், கவிதா பப்ளிகேஷன், 8, மாசிலாமணி தெரு, பாண்டிபஜார், தி. நகர், சென்னை 600017, பக். 576, விலை 350ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-863-8.html
சினிமாவின் தோற்றம், கிராம போன் வேலை செய்யும் விதம், உலகின் முதல் சினிமா ஸ்டூடியோ, சென்னையின் முதல் சினிமா ஸ்டூடியோ, தென்னகத்தின் முதல் சினிமா என்றெல்லாம் சில ஆரம்ப கால நிகழ்ச்சிகளை சொல்லி, பிள்ளையார் சுழி போட்டுவிட்டு, 1931ல் இருந்து முதல் படமான காளிதாஸ் படத்தில் இருந்து துவங்கி 2012ல் வெளியான தமிழ்ப் படங்கள் வரை, ஒரு பருந்துப் பார்வையில் பார்த்துச் செல்கிறார் சிவன். சினிமாவைப் பார்ப்பதோடு திருப்தி அடையாமல் சினிமாவின் வரலாறு மற்றும் வளர்ச்சி குறித்துத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று, துடிக்கும் கலா ரசிகர்களை கவர வல்ல சினிமா இலக்கியப் பொக்கிஷம். நன்றி: தினமலர், 11/8/13.