சுரதா
சுரதா, ஆர். குமாரவேலன், சாகித்ய அகடமி, பக். 128, விலை 50ரூ.
உவமைக் கவிஞர் என்று பலராலும் புகழப் பெற்றவர். 85 ஆண்டு காலம் (1921-2006) உடையில் தூய்மை, உள்ளத்தில் தூய்மை, நட்பில் தூய்மை என்று எங்கும் எப்போதும் தூய்மையாகவே வாழ்ந்து காட்டியவர். அவரது வாழ்க்கை வரலாற்றை மிக அருமையாக, எளிமையாக எழுதியிருக்கிறார் ஆசிரியர். -சிவா.
—-
Guru Vijayeendra The Invinvible Saint(part 1). தமிழ்மூலம்-அம்மன் சத்தியநாதன், ஆங்கிலத்தில்-கே. லஷ்மண், அருள்மிகு அம்மன் பதிப்பகம், பக். 320, விலை 290ரூ.
ஸ்ரீ விஜயேந்திரர், ஸ்ரீ ராகவேந்திரரின் பரமகுரு. அதாவது ஸ்ரீ ராகவேந்திரரின் குருவின் குரு, ஆலயங்கள் 64லிலும் தேர்ச்சி பெற்றவர். அத்துடன் அந்த 64க்களிலும் தலையாய நிபுணர்களை வீழ்த்தி, வெற்றி பெற்று புகழுடன் விளங்கியவர். சன்னியாசியாக வாழ்க்கைக்குள் நுழைதல், அவரது மகிமைகள் ஆகியவை இடம் பெற்றுள்ளன. மாத்வ அன்பர்களுக்கு ஒரு அரிய பொக்கிஷம் இந்த நூல். -மயிலை சிவா.
—-
வீரக் கண்ணகி, சிலம்புச் செல்வர், ம.பொ. சிவஞானம், பக். 160, விலை 100ரூ.
சீவக சிந்தாமணியை தேடித் தொகுத்தப் பதிப்பித்தவர் உ.வே.சா. சிலப்பதிகாரத்தை எங்கும் உரைத்துப் புதுப்பித்தவர் ம.பொ.சிவஞானம். சமயச் சார்பு இல்லாத இளங்கோ அடிகளாரின் துறவு உள்ளம், சிலப்பதிகாரம் நடந்த காலச் சூழலின் வரலாறு, அறம், கற்பு, ஊழ் என்ற மூன்று காப்பிய கருப்பொருட்கள், வீரமிகு தமிழ்ப் பெண் கண்ணகி, கண்ணகி கோவிலும் வழிபாடும், இலங்கையில் கண்ணகி, திருக்குறளும், மணிமேகலையும், ராமாயணமும் சிலம்பில் ஒன்றி நிற்கும் இடங்கள் என்ற 19 தலைப்புகளில் பாமரரும் படித்து வியக்கும் வகையில், திறம்பட இந்த நூலை வார்த்தெடுத்துள்ளார் ம.பொ.சி. வீரமிகு கண்ணகியுடன், இந்திய சிப்பாய் புரட்சியில் பங்கு கொண்ட ஜான்சி ராணியை ஒப்பிட்டுள்ளது மிகவும் அருமை. சிலம்பின் ஓசையால் உள்ளம் குளிரும் நூலில், 60க்கும் மேற்பட்ட எழுத்துப் பிழைகள் உள்ளன. இவைகளை களைதல் நன்று. -முனைவர் மா.கி. ரமணன். நன்றி: தினமலர், 6/10/2013.