சுவாமி தயானந்த சரஸ்வதி
சுவாமி தயானந்த சரஸ்வதி, ஸ்ரீ விஷ்ணு பிரபாகர், டாக்டர் அகிலா சிவராமன், சாகித்ய அகாடமி, விலை 50ரூ.
இந்திய இலக்கிய சிற்பிகள் வரிசையில், ஆரிய சமாஜத்தை நிறுவிய சுவாமி தயானந்த சரஸ்வதியை பற்றியது இந்த நூல். 1824ல் குஜராத்தில் பிறந்த அவர், வடமொழி கற்று தேர்ந்து, வடமாநிலங்கள் முழுவதும் பயணம் செய்து மக்களுக்கு அறவழியை போதித்தார். அதற்காக, அவர் தன் 48வது வயதில் இந்தி மொழியை கற்று மக்களிடம் அவர்களது மொழியில், எளிய நடையில் பேசியும், எழுதியும் வழிகாட்டினார். அனைவரும் இந்தி மொழியை தெரிந்துகொள்ள வேண்டும். அதன் மூலம், ஒற்றுமை ஏற்படும் என்று அவர் உறுதியாக நம்பினார். அதனால், அவர் படைப்புகளை இந்தி மொழியில் எழுதியது மட்டுமின்றி, ஆங்கிலம் உட்பட எந்த பிராந்திய மொழியிலும் அதை மொழிபெயர்க்க அனுமதிக்கவில்லை. கிட்டத்தட்ட 40 நூல்கள் அவர் எழுதியுள்ளார். சுவாமிகளின் வாழ்க்கை இந்திய சமுதாயத்திற்கு ஆற்றிய தொண்டு, வேத, உபநிடதங்களுக்கு உரை எழுதியது என, அவரைப் பற்றிய பன்முக பார்வை கொண்டது இந்த நூல். குறிப்பாக, அவரின் இலக்கிய கொடையை பற்றி, அழகாக விவரிக்கிறது. -திருநின்றவூர் ரவிகுமார். நன்றி: தினமலர், 1/3/2015.
—-
திருவாய்மொழி பாராயண க்ரமம், பாதுகா பவனம் வெளியீடு, கோவை, பக். 307, விலை 200ரூ.
இந்த நூலில், திருவாய்மொழி, பாராயண கிரமத்திற்கான, உடுக்குறியீடுகளோடு பதிப்பிக்கப்பட்டிருக்கிறது. மேலும் பெரியாழ்வாரின் பல்லாண்டு, தொண்டரடிப் பொடியாழ்வாரின் திருப்பள்ளி எழுச்சி, ஆண்டாள் பாடிய திருப்பாவை, மதுரகவியாழ்வார் பாடிய கண்ணிநுண் சிறுத்தாம்பு, திருவரங்கத்து அமுதனார் இயற்றிய இராமாநுச நூற்றந்தாதி, வேதாந்த தேசிகரின் அதிகார சங்கிரகம், பிரப்நத் சாரம், நயினார் ஆசார்யரின் பிள்ளையந்தாதி, சாற்றுமுறை வாழித் திருநாமம், 108 திவ்ய தேச தலங்களுக்கான, ஆங்கில வழிகாட்டி கையேடு என அனைத்தும் தொகுக்கப்பட்டுள்ளன. கோவை, கணபதி போஸ்ட், ஆவாரம்பாளையம் என்ற ஊரில் வேணு கோபாலப் பெருமாள் கோவில் உள்ளது. அந்த கோவிலில், புனருத்தாரண திருப்பணிக்கு இந்த நூலின் விற்பனை மூலம் கிடைக்கும் தொகையை, அர்ப்பணிக்க திட்டமிட்டுள்ளதாக, முன்னுரையில், பதிப்பாசிரியர் தெரிவித்துள்ளார். நன்றி: தினமலர், 1/3/2015.