நவீன ஜோதிட போதினி
நவீன ஜோதிட போதினி, சோ. சந்திரசேகரன், மதி நிலையம், பக். 304, விலை 250ரூ.
To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-370-2.html அனேகமாக எல்லாருக்குமே தம் எதிர்காலத்தை அறிந்துகொள்ள வேண்டும் என்ற ஆசை இயல்பாகவே இருக்கிறது. அதிலும் தின பலன், மாத பலன், ஆண்டு பலன், குரு, சனி கிரகப் பெயர்ச்சிப் பலன்கள் என்று பலவிதங்களில் தங்களுக்கு ஏற்படக்கூடிய பலாபலன்களை அறிந்துகொள்வதில் விருப்பம் இல்லாதோர் மிக மிகக் குறைவு. நம் ராசியின் பலன்களைத் தெரிந்து கொள்ள ஜோதிடர்களைத்தான் அணுக வேண்டியிருக்கிறது. அப்படி ஜோதிடர்களிடம் போகாமல், தங்கள் ஜாதகத்தை தாங்களே கணித்துக் கொள்ளவும், பலன்களை ஓரளவு தெரிந்து கொள்ளவும் உதவும் வகையில் இந்த நூலை எழுதி உள்ளார் ஆசிரியர். அத்துடன் கிரகங்களின் சேர்க்கைகளால் ஏற்படும் பலவித யோகங்கள், திருமணப் பொருத்தம் பார்க்கும் முறை ஆகியவற்றையும் விவரித்திருக்கிறார். ஜோதிடத்தைக் கற்க விரும்புவோர், இதை ஒரு பாலபாடமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம். அதற்கு மேலும் கற்க விரும்புவோருக்கும், இந்த நூல் சிறந்த அடிப்படை நூல். -மயிலை சிவா. நன்றி: தினமலர், 1/3/2015.
—-
ஸ்ரீ தியாகராஜ வேங்கடரமண சரித்திரம், கே.ஆர். சேதுராமன், திருமதி கே.எஸ். மீரா, பெங்களூரு, பக். 148, விலை 150ரூ.
கடந்த 1965ல் வெளியான இந்த நூல், இரண்டாம் பதிப்பாக, தற்போது வெளியிடப்பட்டுள்ளது. நூலாசிரியர், மிகுந்த பக்தியுடன், தியாக பிரம்மத்தின் வரலாறு மற்றும் அவரது சீடர், தியாகராஜ வேங்கடரமணரின் வரலாறு ஆகியவற்றை தொகுத்து, இந்த நூலில் கொடுத்துள்ளார். தியாக பிரம்மத்தின் சீடர்களில், வாலாஜா பேட்டை வேங்கடரமண சிஷ்ய பரம்பரை, உமையாள்புரம் சிஷ்ய பரம்பரை, தில்லைஸ்தானம் ராமய்யங்கார் சிஷ்ய பரம்பரை ஆகிய மூன்று பரம்பரைகள் குறிப்பிடத்தக்கவை (பக். 60). தியாகராஜரின் இசை படைப்புகளில், நவுகா சரித்திரம் அற்புதமானது (பக். 81). தியாகராஜர் தம் வாழ்நாளில் செய்த, ஒரே யாத்திரை திருப்பதி யாத்திரை (பக். 88). அய்யம்பேட்டை வேங்கடரமணர், வாலாஜாபேட்டை வேங்கடரமணராக உயர்வு பெற்றது, வேங்கடரமணரின் படைப்புகள்(பக். 108)என,பல சுவாரசியமான தகவல்களும், செய்திகளும் இந்த நூலில் நிரம்பி உள்ளன. இந்த நூலில் சவுராஷ்டிரர்களின் வரலாறும் கொடுக்கப்பட்டுள்ளது. -டாக்டர் கலியன் சம்பத்து. நன்றி: தினமலர், 1/3/2015