சு. சண்முகசுந்தரமூர்த்தியின் நான்கு கதைப் பாடல்கள்
நான்கு கதைப் பாடல்கள், சு. சண்முகசுந்தரம், சாகித்திய அகாதெமி, சென்னை 18, பக்கங்கள் 496, விலை 220ரூ.
ஏட்டில் வந்த இலக்கியங்கள், பண்டிதர் இலக்கியம் என்றும், ஏட்டில் எழுதப்படாத இலக்கியங்கள், பாமரர் இலக்கியம் அல்லது நாட்டுப்புற இலக்கியம் என்றும் கூறுவர். ஏட்டில் எழுதப்படாத பாட்டுகதை, பழமொழி, விடுதலை, புராணம் போன்றவை தற்காலத்தில், அச்சில் வந்து இலக்கிய இன்பம் அளிக்கின்றன. அந்த வகையில் இந்நூலில், கட்டமொம்மு கதை, தேசிங்கு ராஜன் கதை, மதுரை வீரன் கதை, பழையனூர் நீலி கதை என்ற நான்கையும் உரைநடையில் சுருக்கமாகவும், பாடல்களாகவும் காண்கிறோம். தமிழ் இலக்கிய வரலாற்றிற்கு இந்நூல் உதவும். ஒவ்வொரு கதைப்பாடலின் இறுதியில் அருஞ்சொற்பொருள்களும், நூலின் இறுதியில் ஆய்வுரையும் வெளியிட்டிருப்பது, நூலைச் சுவைக்கப் பெரிதும் உதவும். தொகுப்பாசிரியரின் சீரிய பணியும், வெளியிட உதவிய சாகித்ய அகாடமியாரின் ஆதரவும் பாராட்டுதலுக்கு உரியன. – டாக்டர் கலியன் சம்பத்து. நன்றி – தினமலர், 10 பிப்ரவரி 2013.