சென்னிகுளம் அண்ணாமலை ரெட்டியார் கவிதைத் தொகுப்பு

சென்னிகுளம் அண்ணாமலை ரெட்டியார் கவிதைத் தொகுப்பு, உரை விளக்கம் அருட்கவி அரங்க.சீனிவாசன், திருக்குறள் பதிப்பகம், பக். 536, விலை 500ரூ.

உரையுடன் மீண்டும் வெளியானது அண்ணாமலை ரெட்டியார் பாடல்கள் தமிழ் வளர்த்த மதிப்பிற்குரிய தென்பாண்டித் தமிழகத்தில், பலவர்கள் பலர் தோன்றினர். அவர்களில் ஒருவர், கவியாற்றல் மிக்க இளைஞர், சென்னிகுளம் அண்ணாமலை ரெட்டியார். 30 ஆணடுகளே வாழ்ந்த அவர், பல்வேறு தெய்வங்களையும், ஊற்றுமலை ஜமீன்தார் இருதாலய மருதப்பத் தேவரையும் பாடியுள்ளார். இசையுலகமும், நாடக உலகமும் பொதுமக்களும் உச்சிமேல் வைத்து மெச்சிக் கொண்டாடிய, உயர்வுமிகு காவடிச் சிந்துப் பாடல்கள், தனிப் புகழ் பெற்றவை. வீரகேளரம்புதூர் ஜமீன்தார் வீட்டிலிருந்து, அண்ணமலையாரின் அழகிய திருவுருவப் படத்தை, சேகர் பதிப்பகம் வெள்ளையாம்பட்டு சுந்தரம், பெருமுயற்சி செய்து வாங்கி வெளிப்படுத்தியது புதிய வரலாறு. அவர் பெற்று வெளியிட்ட உருவப்படத்திற்கு, உலகோர் காண முழு உருவச் சிலையும், நினைவு மண்டபமும் எழுப்பிப் புதிய வரலாற்றுச் சின்னங்களை, தம் சொந்த செலவில் உருவாக்கியவர் கோவில்பட்டி வள்ளல் தொழிலதிபர் கல்வித் தந்தை கே.ராமசாமி ரெட்டியார். மேலும் நினைவு மண்டபத்தில், கவிராயர் மறைந்த நாளான தை அமாவாசை நாளில் சிறப்பான கவியரங்க, பட்டிமன்ற, சொற்பொழிவு, கச்சேரி, நடனம், மாணவருக்கான போட்டிப் பரிசளிப்பு என, பலவகைப்பட்ட நிகழ்வுகளையும் அறக்கட்டளை வைத்து, 25 ஆண்டுகளாக நடத்தி, நிலையான தொண்டு புரிகிறார் என்பதும், வரலாறு. அரங்க.சீனிவாசனார் பெரும் புலமையால், அண்ணாமலைக் கவிராயரின் கவிதைகளை பல்லாண்டுகளாக திரட்டி, சிறந்த உரை விளக்கமும் எழுதினார். தமிழ்த் தாத்தா உ.வே.சா. வழியில் மிகச் சிறப்பான ஆராய்ச்சி முன்னுரையும் தந்துள்ளார். பார்வைக்குக் கிடைத்த, 434 பாடல்களுக்கும், இலக்கணப் புலமையுடன் உரை விளக்கம் தந்து, பெரிய அளவிலான, 536பக்கங்களைக் கொண்ட அழகிய அமைப்பில், 1989ல், முதல் பதிப்பாக வெளியிட்டதை, 2015 ஜனவரி 20ம் தேதி, மறுபதிப்பாக்கி, கோவில்பட்டி அருளாளர், கே.ஆர். மீண்டும் தமிழுலகிற்குப் படைத்து அளித்துள்ளர். கவியுலகமும், கல்வி நிலையங்களும், தமிழ் வாசகர் உலகமும் படித்துப் பயன்பெற்ற தமிழ் செல்வத்தை, மேலும் வளர்க்க உதவும் நூலாக இதைக் கொள்ளலாம். நன்றி: தினமலர், 25/1/2015.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *