சென்னைக்கு மிக அருகில்
சென்னைக்கு மிக அருகில், விஸ்வபாரதி, காவ்யா, சென்னை, பக். 128, விலை 100ரூ.
படைப்பின் அகத்தேடல் அன்பாக இருக்கட்டும், படைப்பின் அடிநாதம் அறமாக இருக்கட்டும், படைப்பின் நோக்கம் எல்லைகள் கடந்த மனித நேயமாக இருக்கட்டும் என தனது முகவுரையில் தெளிவுபடுத்திவிடுகிறார் விஸ்வபாரதி. இத்தொகுப்பில் மிக அழகான கதை என்றும், வடிவ அளவிலும் நிறைவான கதை என்றும் பூவரசு கதையைச் சொல்லலாம். கிராமத்தின் நம்பிக்கைகள் சார்ந்த சங்கிலிசி சாமி கதை நிறைவாக உள்ளது. இதேபோல பல கதைகளிலும் சுற்றுச் சூழல் பிரச்னை, சரிந்துபோன சமூக மதிப்பீடுகள் குறித்த வருத்தம் வெளிப்பட்டுக் கொண்டே இருக்கிறது. இத்தொகுப்பில் உள்ள பெரும்பாலான கதைகள் சமூக அக்கறை சார்ந்த மனோபாவத்தை பிரதிபலிக்கின்றன. கிராமம், அதன் எளிமை, பேச்சு வழக்கு பல கதைகளிலும் அழகாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஒரு வழக்கு விசாரணை போன்ற கதைகள்தான் சற்று உறுத்தல். தமிழ்ச் சிறுகதையை உலகத் தரத்துக்கு பலரும் வளர்த்தெடுக்கிறார்கள். அவற்றுடன் ஒப்பிடும்போது வடிவ ரீதியாக இத்தொகுப்பில் உள்ள கதைகள் சற்று பின்தங்கியவைதான். என்றாலும் படைப்பின் நோக்கம் உயர்ந்ததாகவும், பாசாங்கற்றதாகவும் உள்ளதால் நம்மை இத்தொகுப்பு வசீகரிக்கவே செய்கிறது. நன்றி: தினமணி, 21/4/2014.
—-
கோயில்களும் விழாக்களும், க. ரவீந்திரன், ஆனந்த நிலையம், சென்னை, பக். 88, விலை 50ரூ.
சித்திரைத் திருவிழாவிலிருந்து, ஹோலிப் பண்டிகை வரை, 21 சில முக்கிய விழாக்களின் சிறப்பு திருவிழா சிறப்பாகக் கொண்டாடப்படுகின்ற திருத்தலங்களின் பெருமை. இவைகளை 21 தலைப்புகளில் தந்துள்ளார் நூலாசிரியர். தமிழக் கோவில்கள் என்ற தலைப்பில் நாமக்கல் ஆஞ்சநேயர் திருக்கோவில் பற்றிய சின்னஞ்சிறு குறிப்புகளும் இந்நூலில் உள்ளன. விழாக்கள் அல்லது திருக்கோவில்கள் ஏதாவது ஒரு தலைப்பில், அதிக பயனுள்ள தகவல்களைத் தந்திருக்கிலாம். -குமரய்யா. நன்றி: தினமலர், 27/4/2014.