சென்னைக் கிறித்தவக் கல்லூரியின் வாழ்வும் வளமரபும்
சென்னைக் கிறித்தவக் கல்லூரியின் வாழ்வும் வளமரபும், ஜோஷ்வா கலபாடி, டி.அம்புரோஸ், ஜெயசேகரன், தமிழில் யோ. ஞானச்சந்திர ஜாண்சன், கீர்த்தனா பதிப்பகம், பக். 640, விலை 300ரூ.
சென்னையில் கிறித்தவக் கல்லூரி, மாநிலக்கல்லூரி, பச்சையப்பன் கல்லூரி மூன்றும் முதன்மைக் கல்லூரி துவங்கப்பட்டது. மாநிலக் கல்லூரி 1940ல் துவங்கப்பட்டது. பச்சையப்பன் கல்லூரி, 1842ல் துவங்கப்பட்டது. சென்னைக் கிறித்தவக் கல்லூரியின் வரலாறு ஆங்கிலத்தில், 2010ல் வெளியிடப்பட்டது. அது, தற்போது தமிழில் வெளியாகி உள்ளது. இந்த நூலைப் படிக்கும்போது, கல்லூரி வரலாறு மட்டும் அல்லாமல், கல்வியின் வரலாறும் வெளிப்படுகிறது. இந்தியாவின் இரண்டாவது ஜனாதிபதியாக விளங்கிய, சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், வி.வி.கிரி, பரிதிமாற்கலைஞர், எம்.எஸ்.பூர்ணலிங்கம் பிள்ளை, எஸ், வையாபுரி பிள்ளை, டி.கே. சிதம்பரநாதமுதலியார், கே. ஏ. நீலகண்ட சாஸ்திரி, நடிகர் ஜெமினி கணேசன் முதலானோர், கிறித்தவக் கல்லூரியில் படித்தவர்கள். தற்போது கிறித்தவக் கல்லூரியை, தாம்பரம் கிறித்தவக் கல்லூரி என்று கூறுகின்றனர். ஆனால் இந்தக் கல்லூரி, முதன் முதலில் துவங்கப்பட்டது, ஜார்ஜ் டவுனில்தான் என்பது பலருக்கும் தெரியாத செய்தி. நூறு ஆண்டுகளாக அங்கே செயல்பட்ட கல்லூரி, 1937ம் ஆண்டில்தான் தாம்பரத்திற்கு மாற்றப்பட்டது. சென்னையில், காட்டைப் பார்க்க விரும்பினால், அவர்கள் தாம்பரம் கிறித்தவக் கல்லூரிக்கு செல்லலாம் எனும் அளவிற்குக் காட்டைப் பராமரித்து வருகின்றனர். மொழிபெயர்ப்பு என்று தோன்றாமல், தமிழில் படைத்த படைப்புப்போல், எளிமையான மொழிநடையில் அமைந்துள்ள இந்தக் கல்லூரி வரலாற்றில், அரசியல் வரலாறும், சமூக வரலாறும், சமய வரலாறும் கலந்திருப்பது சிறப்பு. கடந்த 1905 முதல், 1900 வரையுள்ள ஆண்டுகளில், கல்லூரியில் மாணவராக இருந்த ராதாகிருஷ்ணன், படிப்படியாக உறுதியாகப் புகழ்பெற்ற ஆசிரியராகவும், கல்வியாளராகவும், பொதுநல தொண்டு புரிபவராகவும் முன்னேற்றம் கண்டார். கோல்கட்டாவிலோ அல்லது ஆக்ஸ்போர்டிலோ எங்கிருந்தாலும், அவர் இன்றியமையாதவராக, முதல்தரக் கல்வியாளராகக் கருதப்பட்டார் (பக். 434). -முகிரை ராசபாண்டியன். நன்றி: தினமலர், 8/11/2015.