செவ்விலக்கியச் சிந்தனைப் புதையல்
செவ்விலக்கியச் சிந்தனைப் புதையல், மு. இளங்கோவன், வயல்வெளிப் பதிப்பகம், இடைக்கட்டு, உள்கோட்டை அஞ்சல், கங்கைகொண்ட சோழபுரம் வழி, அரியலூர் மாவட்டம், பக். 160, விலை 150ரூ.
தமிழ் இலக்கியங்கள் மொழிவளம், கற்பனைத் திறன், வாழ்க்கைத் தர்மங்களை மட்டுமல்ல, அவை சரித்திரத்தின் பதிவுகளாகவும் திகழ்ந்துள்ளன என்பதை மிக மிக எளிமையாகக் கூறும்வகையில் நூலின் கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. தமிழக மன்னர்கள் தங்களுக்குள் ஒற்றுமையின்றி வாழ்ந்தார்கள் என்று எண்ணத்தை மாற்றும்வகையில் அமைந்துள்ள கரிகாற்சோழன் கட்டுரை முதல் பட்டினப்பாலை வரையில் அனைத்திலும் புதிய புதிய அரிய தகவல்களை அறியும் வகையில் நூலாசிரியர் தொகுத்தளித்திருப்பது சிறப்பாகும். சங்க இலக்கிய வாய்மொழிப் பாடல்கள், மக்களிடம் சென்று சேருவதற்கு அவர்கள் அறிந்த செய்தியை உள்ளடக்கியனவாக அவை இருந்தன என சங்க இலக்கியங்களில் வாய்மொழிப் பாடல்களின் தாக்கம் என்ற கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். நன்னன் வரலாறு, சங்ககால நவிரமலை ஆகிய கட்டுரைகளுக்கு முன்னதாகவே மலைபடுகடாம் நூலின் வரலாறும் திரித்துரைக்கும்போக்கும் என்ற கட்டுரையை இடம்பெறச் செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். அதாவது 3 முதல் 5ஆவது வரையிலான கட்டுரைகளின் பல தகவல்கள் திரும்பத் திரும்ப இடம் பெற்றிருப்பது போன்ற சிற்சில குறைகளைத் தவிர, இந்நூலானது இலக்கிய வரலாற்றுக் கூட்டாக இருப்பது தமிழ் ஆய்வுக்களத்தில் பாராட்டத்தக்கதாகும். நன்றி: தினமணி, 30/9/13.
—-
மண் கசந்தால் மானுடமே அழியும், பி. தயாளன், பாவை பப்ளிகேஷன்ஸ், பக். 100, விலை 60ரூ.
மனிதன் நலமாக வாழ்வதற்கு, இயற்கையைப் போற்றிப் பாதுகாக்க வேண்டியது மிகவும் அவசியம். சுற்றுச்சூழலை பாதுகாத்திட இயக்கமாகவும், சங்கமமாகவும், தனி நபராகவும் பாடுபட வேண்டும். சூழல் கேடுகளைப் பற்றி, மக்களிடம் பரப்புரை மேற்கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற கருத்தில் எழுதப்பட்டுள்ள விழிப்புணர்வு நூல். நீர் மாசுபாடு, புவி வெப்பமடைதல், அடங்காத இரைச்சல், ஆபத்தை விளைவிக்கும் ஆஸ்பெஸ்டாஸ் என்று பத்தொன்பது தலைப்புகளில், சுற்றுச் சூழல் குறித்து அழகான கட்டுரைகளில் விவரிக்கப்பட்டுகிறது சிறப்பாகும். -ஸ்ரீநிவாஸ் பிரபு. நன்றி: தினமலர் 17/11/13.