சைவ – சமயக் கலைக்களஞ்சியம்-2

சைவ – சமயக் கலைக்களஞ்சியம்-2, முனைவர். இரா. செல்வக்கணபதி, தெய்வச் சேக்கிழார் மனிதவள மேம்பாட்டு அறக்கட்டளை, 2ம் தொகுப்ப, பக். 720, 10 தொகுதிகளும் சேர்த்து ரூ. 15,000.

பத்துத் தொகுதிகளையும் 7200 பக்கங்களையும் கொண்ட சைவ-சமயக் கலைக் களஞ்சியத்தின் இரண்டாவது தொகுதி இது. தமிழகத்திற்கு அப்பால் இந்திய மாநிலங்களிலும் ஆசிய ஐரோப்பிய நாடுகளிலும், ஏனைய உலக நாடுகளிலும் தோன்றி வளர்ந்து நிலைபெற்ற சைவ சமயத்தின், 5000ஆண்டுகால வியப்பூட்டும், ஆவணமாக, 720 வண்ணப் பக்கங்களில், காண்பதற்கரிய வண்ணப்படங்களுடன் நம் முன் வியப்பாய், இம்முயற்சி விரித்து பிரமிப்பூட்டுகிறது. கடந்த நூறு ஆண்டுகளில் உலகளாவிய சைவ சமயத்தின் வரலாறு பேசும் வேறு நூல் ஒன்றும் வெளிவரவில்லை என்பதே உண்மை. தலைமைப் பதிப்பபாசிரியரும் துணை நின்ற அறிஞர் பெருமக்களும் நம் பாராட்டுக்குரியவர்கள். சைவ சமயம் இந்தியா என்ற, 76 பக்க மிகப் பெரிய பதிவில், உலக நாகரிகங்களின் அடிப்படையில், சிந்து சமவெளி நாகரிகம் மிகத் துல்லியமாக ஆராயப்பட்டுள்ளது. ஏறத்தாழ இந்தியாவில் நிலவும் பதினான்கு மொழிகளில் வேதகாலம் தொடங்கி, நேற்றுவரை அருளிச் செய்யப் பெற்ற, மிக உயர்ந்த பன்மொழி இலக்கியப் பரப்பை, அடுத்த பகுதி மிகத் துல்லியமாக அடையாளப்படுத்துகிறது. தமிழ் மொழிக்கு இணையான பக்தி இலக்கியப் பரப்பை சமஸ்கிருதமும், காஷ்மீர் மொழியும் கொண்டியங்குவது நம் முன் பெருமிதத்தை விதைக்கிறது. மேன்மை கொள் சைவ தொடரின் மெய்ம்மை நமக்குப் புலப்படுகிறது. சைவ சமயம் ஈழம் என்ற 233 பக்க பிரமாண்டமான, ஐந்தாவது பதிவு சைவ சமய வளர்ச்சி வரலாற்றில் இலங்கையின் மிகப்பெரிய பங்களிப்பை இலங்கை அறிஞர்களின் துணையோடு ஆய்ந்து, நம்முன் வைக்கிறது. ஈழத்தமிழ் இலக்கியப்போக்கு, ஈழத்தில் சிவன், உமை, கணபதி, முருக வழிபாடுகளின் நீண்ட வரலாறுகள் தேவரா திருப்புகழ். பெற்ற ஈழத்துச் சிவாலயங்கள் ஆகியவற்றை ரசிக்கலாம். சைவத் தமிழர்கள் இல்லங்களிலெல்லாம் இருக்க வேண்டிய ஒரு கலைப்பெட்டகம் இது என்பதில், சிறிதும் ஐயமில்லை. நன்றி: தினமலர், 4/8/2013.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *