சைவ சமயக் கலைக் களஞ்சியம் தொகுதி 3
சைவ சமயக் கலைக் களஞ்சியம் தொகுதி 3, முனைவர் ரா. செல்வக்கணபதி, தெய்வச் சேக்கிழார் மனிதவள மேம்பாட்டு அறக்கட்டளை, விலை 10 தொகுதிகளும் சேர்ந்து 150000ரூ
தமிழ்ச் சைவப் பெருமக்களின் வேதங்களாகப் போற்றப் பெறுவன சைவத் திருமுறைகள். அவை 27 ஆசிரியர்களால், பாடப்பெற்ற 18 280 பனுவல்களால் அமைந்த செந்தமிழ்க் கருவூலம். இத்தொகுதிக்கு அருளாசியுரை வழங்கியுள்ள திருப்பனந்தான், காசித் திருமடத்து அதிபர், முனைவர் ஆர். செல்வக் கணபதியின் முயற்சி துணிச்சலானது. இவரின் வெற்றி சாதனையானது எனப் பாராட்டியிருப்பது, நூற்றுக்கு நூறு உண்மை என்பதை இத்தொகுதி பறை சாற்றி நிற்கிறது. க.வெள்ளைவாரணனாரின் பன்னிரு திருமுறை ஆய்வைப் பலமடங்கு, புதிய கோணத்தில் ஆசிரியர் மேலெடுத்துச் செல்கிறார். திருமுறைகள் குறித்துக் கடந்த ஆறு ஆண்டுகளில் அறிஞர் பலர் எழுதிய ஆய்வு நூல்களின் இத்தொகுப்பு, வடித்தெடுக்கப்பட்டு உள்ளது. திருமுறைகள் பற்றிய எந்த ஒரு தேடலுக்கும், இதனுள் விடை இருப்பது இதன் தனிச்சிறப்பு. சன்மார்க்க தேசிகன், வடலூர், தவத்திரு ஊரனடிகளாரின் அணிந்துரை, இத்தொகுப்புக்கு இட்ட உச்சித் திலகமாக நின்று பெருமை சேர்க்கிறது. அறிஞர் டி.என். ராமச்சந்திரனின் ஆங்கில முடிவுரை, உலக மொழிகள் பலவற்றிலும் சைவத் திருமுறைகள் எவ்வெப்போது, யார் யாரால் மொழிபெயர்க்கப் பெற்றுள்ளன என்பதை விளக்கும் நுண்ணிய வரலாற்றுப் பதிவாகும். தேவாரப் பண்ணமைதிகளும் யாப்பியல் கூறுகளும் விரிவாக, இசைவல்ல அறிஞர்களின் துணையோடு ஆராய்ந்து பதிவு செய்யப் பெற்றுள்ளன. சாளரப்பாணி, யாழ் முரி என்பனவற்றைப் பற்றி நிலவி வந்த ஐயங்கள் தீர்த்து வைக்கப்பட்டுள்ளன. பன்னிரு திருமுறைகளில் அதிகமாக ஆராயப் பெறாத ஒன்பது, பத்து மற்றும் பதினோராம் திருமுறைகள் இத்தொகுப்பில் முதன் முறையாக விரிவாக ஆராயப் பெற்றுள்ளன. முழுவதும் பல வண்ண அச்சில் ஏராளமான படங்களுடன் உயரிய காகிதத்தில் நல்ல கட்டமைப்பில் இத்தொகுதி வடிவமைக்கப்பட்டிருப்பது கண்ணையும், கருத்தையும் கவர்கிறது. என்போல் சைவத்திருமுறைகளை ஓதி, அவற்றால் வாழ்வு பெற்று வரும் பல்லாயிரவர்களுக்கு இத்தொகுப்பு. சிவனருட் கனியாகவே இனிக்கும் என்பது சர்வ நிச்சயம். -முனைவர் திருமதி சாரதா நம்பியாரூரன்.
—-
மாந்தியின் மகத்துவம், ஜோதிடர் அல்லூர் வெங்கட்ராமன், ஸ்ரீ ஆனந்த நிலையம், பக். 144, விலை 100ரூ.
ஜோதிட சாஸ்திரப்படி, ஒன்பது கிரகங்களின் அமைப்புப்படி பலன்கள் எப்படி அமைகின்றனவோ, அதன்படிதான், தமிழ் நாட்டில் கிரகபலன்களை ஜோதிடர்கள் கணித்துச் சொல்கின்றனர். சனியின் உப கிரகமான மாந்தியை அவ்வளவாகக் கணக்கில் கொள்வதில்லை. கேரளத்திலும் மற்ற வட மாநிலங்களிலும், மாந்தி என்ற குளிகனை ஜாதகத்தில் குறிக்கும் முறையைப் பின்பற்றி வருகின்றனர். நூலாநிரியர் மாந்தியைப் பற்றிப் பல்வேறு ஜோதிட நூல்கள் கூறுவது பற்றி விளக்கமாகவும், அது பல்வேறு ராசிகளில் நிற்கும்போதும் தரும், பலன்களையும் விவரித்து எழுதியிருக்கிறார். ஜோதிட அன்பர்களுக்கு பெரும் பயன்தரும் நூல். -கேசி. நன்றி: தினமலர், 25/8/2013.