சோவின் ஒசாமஅசா
சோவின் ஒசாமஅசா, எழுத்தும் தொகுப்பும் மணா, குமுதம் பு(து)த்தகம், சென்னை, பக். 256+256, விலை 190ரூ+190ரூ.
ஒரு சாதாரண மனிதனுக்குள் இத்தனை அசாதாரண அனுபவங்களா என்று வியக்க வைக்கும் நூல். வழக்கறிஞர், பத்திரிகையாளர், விமர்சகர், நடிகர், அரசியல்வாதி, நாடகவாதி என்று பன்முகத்தன்மை கொண்ட சோவின் அனுபவங்கள் ஒவ்வொன்றும் கருத்துச் சுரங்கம். தாத்தா ராமநாதய்யர் தொடங்கி இந்தியாவின் மிகப்பெரிய தலைவர்கள் மற்றும் ஆளுமைகளுடனான அவரது அனுபவங்களைச் சொல்லும்போது, உண்மையைத் துணிந்து சொல்லும் போக்கு சோவுக்கே உரியது. எம்.ஜி.ஆர்., சிவாஜி, எம்.ஆர்.ராதா, காமராஜர், ராஜாஜி, பாலசந்தர், மொரார்ஜி, அத்வானி, இந்திராகாந்தி, ஜெயப்பிரகாஷ் நாராயணன், மூப்பனார், வாலி, கண்ணதாசன், கமல், ஜெயலலிதா, ரஜினி, மோடி என்று எண்ணற்ற அசாதாரண மனிதர்களுடன் பழகும் வாய்ப்பு கிட்டிய சூழல், அவர்கள் மூலம் கிடைத்த அசாதாரண அனுபவங்கள் ஒவ்வொன்றும் அந்தந்த துறைக்கான வரலாற்றுப் பதிவாக இருக்கிறது. உதாரணத்திற்கு இந்திராகாந்தியைப் பற்றி சொல்லும்போது, அவரைச் சுற்றியுள்ளவர்கள், அவரைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகள், அரசியல் மாற்றங்கள், பின்புலம் என்று ஒன்றுவிடாமல் சொல்லி ஆச்சரியப்படுத்துகிறார். ஒவ்வொரு கட்டுரையிலும் அவர் சொல்லும் அனுபவத்தின் அசாதாரணம் நூலுக்குள் நுழைவதே தெரியாமல் அப்படியே நம்மை வசீகரித்துக் கொள்கிறது. இத்தனை அரசியல், சினிமா, சட்டம், நாடகம், பத்திரிகை என்று இடைவிடாமல் இயங்கும் ஒரு மனிதனால் எப்படி இவ்வளவு அனுபவங்களை மறக்காமல் வைத்திருக்க முடிகிறது என்ற வியப்பு எழுகிறது. சின்னஞ் சிறு நிகழ்வையும் நினைவு பிசகாமல் உரிய இடத்தில் உரிய சமயத்தில் பொருத்தியிருப்பது படிப்போருக்கு சுவாரஸ்யம். தேசத் தலைவர்கள் வாஜ்பாய், சந்திரசேகர், அத்வானி, மோடி, எழுத்தாளர்கள் சாவி, ஜெயகந்தன் உள்ளிட்ட எண்ணற்றவர்களுடனான அனுபவம் என்பது யாருக்கும் கிட்டாத வாய்ப்பு. அசாதாரண மனிதர்கள் பலரின் சிறப்புகளை, குணங்களை, அணுகுமுறை, செயல்முறைகள், அவர்கள் சொல்லிச் சென்ற பல விஷயங்களைப் படிக்கின்ற வாசகர்களுக்கும் கிட்ட வைத்திருப்பது இத்தொகுப்பின் மிகபெரிய பலம். அதற்கு மணாவின் உழைப்பு உறுதுணையாகியிருக்கிறது. நன்றி: குமுதம், 20/4/2015.