ஜாதியை அழித்தொழிக்கும் வழி

ஜாதியை அழித்தொழிக்கும் வழி, அம்பேத்கர், தலித் முரசு, சென்னை, பக். 143, விலை 70ரூ.

அம்பேத்கரின் மூலச் சிறப்பான சிந்தனை சாதி பௌதீகத் தடையல்ல. அது மனத்தடை என்பதாலேயே அதை கடப்பது கடினம் என்கிறார் அம்பேத்கர். அம்பேத்கரின் ஆளுமை காந்தியின் கருத்துநிலையை விமர்சிப்பதன் மூலமாகவே உருப்பெற்றதாகக் கூறும் சிந்தனைப் போக்குகளும், அதேபோல இந்து சமுதாயத்துக்கு வெளியே இருந்து அதை அம்பேத்கர் கடுமையாக விமர்சிக்க, காந்தியோ உள்ளிருந்துகொண்டே அதில் தீண்டாமை ஒழிப்பு முதலிய சீர்திருத்தங்களைச் செய்தார் என்கிற கருத்தும் அண்மைக் காலமாக முன்வைக்கப்படுகிறது. இச்சூழலில் அம்பேத்கரின் மூலச் சிறப்பான சமூகவியல், தத்துவப் பார்வையை வெளிப்படுத்தும் ஜாதியை அழித்தொழிக்க வழி நூலின் தமிழாக்கம் புதிய பதிப்பைக் கண்டுள்ளது. லாகூரிலிருந்து ஜாட் பட் தோடக் மண்டல் என்னும் அமைப்பின் ஆண்டு முடிவு மாநாட்டுக்குத் தலைமை தாங்க அழைக்கப்பட்டிருந்த அம்பேத்கர், ஓர் இந்துவாக இருந்து கடைசியாக நான் ஆற்றும் உரை என்று எழுதி, உரையில் சாதி இந்துக்களுக்குப் பிடிக்காத சில வாசகங்களைத் தவிர்த்துவிடுமாறு அந்த அமைப்பு விடுத்த வேண்டுகோளை ஏற்க மறுத்து, ஆங்கிலத்தில் எழுதப்பட்ட அந்த உரையை தனது சொந்த செலவில் அனிஹிலேஷன் ஆஃப் கேஸ்ட் எனும் தலைப்பில் வெளியிட்டார். இந்திய மொழிகளில் தமிழில்தான் முதலில் மொழியாக்கம் வெளிவந்தது. 1936 முதல் 1937 வரை அதனைத் தொடர் கட்டுரையாக குடி அரசு ஏட்டில் வெளியிட்ட பெரியார் ஈ.வே.ரா. பின்னர் பல பதிப்புகளைக் கண்ட நூல் வடிவத்திலும் கொண்டுவந்தார். அதன் பிறகு தமிழில் (நமக்குத் தெரிந்தவரை) குறைந்தது 4 புதிய மொழியாக்கங்கள் வெளிவந்துள்ளன. ஆழமான, மறுக்க முடியாத, பகுத்தறிவு சார்ந்த விவாதங்களைக் கொண்டுள்ள இந்த நூலில் தேவையற்ற ஒரு வரிகூட இல்லை. தலித் அல்லாத சாதி இந்துக்களை விளித்து எழுதப்பட்ட உரை, இந்தியாவுக்கு மட்டுமே (தென்னாசியா முழுவதற்கும்கூட) தனிச் சிறப்பாக உள்ள சாதி அமைப்பிலுள்ள ஏற்றத்தாழ்வு ஏணிப்படிபோல மேல்கீழ் வரிசையில் உள்ளதையும், சாதி என்பது எந்த அறிவியல், பகுத்தறிவு, தார்மிக சிந்தனையாலும், மரபினரீதியான (racial) அல்லது உயிரியல் ரீதியான விளக்கங்களாலும் நியாயப்படுத்த முடியாததாக இருப்பதையும் எடுத்துரைத்து, தன்னுரிமை, சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய மூன்றையும் மறுக்கும் சாதி அமைப்பைக் கட்டிக்காக்கும் மதம், சாஸ்திரங்கள் முதலானவற்றையும் இந்துக்கள் நிராகரிக்காவிட்டால் மானுடத்தன்மை வாய்ந்த ஒரு சமுதாயத்தை ஒருபோதும் உருவாக்க முடியாதென ஆழமாக நிறுவுகிறது. இந்து என்கிற பெயரே ஓர் அந்நியப் பெயர்தான். உள்ளூர் மக்களிலிருந்து தம்மை இனம் பிரித்துக்காட்ட முகமதியரால் அளிக்கப்பட்ட பெயரே இந்துக்கள் என்பது. முகமதியரின் படையெடுப்புக்கு முந்தைய எந்த சமஸ்கிருத நூலிலும், இந்து என்கிற சொல்லே காணப்படவில்லை. இந்து முஸ்லிம் கலவரம் ஏற்படும் நேரங்கள் தவிர்த்த மற்ற நேரங்களில், மற்ற சாதிகளோடு தமது சாதிக்கு உறவு உண்டு என்று எந்த சாதியும் எண்ணுவது இல்லை. பொதுநலம் என்கிற உணர்ச்சியையே சாதி கொன்றுவிட்டது. இந்து மதத்தவன் பொதுமக்கள் என்று கருதுவது, தன் தன் சாதியினரையே, தன் சாதிக்கு மட்டுமே அவன் பொறுப்பாளியாக விசுவாசம் உள்ளவனாக இருக்கிறான். நல்லைவைகளுக்கு ஆதரவாக நிற்பதா, தீமைகளுக்கு ஆதரவாக இல்லாமல் போவதெல்லாமல், சாதிக்கு ஆதரவாக இருப்பதா இல்லையா என்பதுதான் பிரச்சனையாக ஆகிவிடுகிறது. தன்னைவிட உயர்ந்ததாக உள்ள ஒரு சாதியோடு கலப்பு மணம் செய்யவோ, சேர்ந்து உண்ணவோ வேண்டும் என்று எந்த ஒரு சாதியேனும் உரிமைக் குரல் எழுப்பினால், அக்குரல் ஒடுக்கப்பட்டுவிடுகிறது என உரை எழுதப்பட்ட 78 ஆண்டுகளுக்குப் பின்னரும்கூட எவராலும் மறுக்கப்பட முடியாத கருத்தாழம் மிக்க வாசகங்கள் இந்நூலில் நிரம்பியுள்ளன. சாதி என்பது செங்கல் சுவர், முள்வேலி போன்ற பௌதீகத் தடையாக இருந்தால் அதைத் தகர்த்துவிட முடியும் என்றும், அது மனத்தடையாக இருப்பதால் அதைக் கடந்து வருவது சொர்க்கத்திற்குப் போகும் பாதையைவிட கரடு முரடானது. கடினமானது என்று கூறும் அம்பேத்கர், ஒவ்வொரு நாட்டிலும் ஆளும் வர்க்கமாக இல்லையென்றாலும்கூட, அந்த நாட்டை ஆடிப்படைக்கும் அளவுக்குச் செல்வாக்குடன் இருப்பது அறிவாளி வர்க்கம்தான் என்றும் இந்தியாவிலுள்ள அறிவாளி வர்க்கமாக பார்ப்பனர்கள் அமைந்திருப்பது சாதியமைப்புக்கான அரணாக விளங்குகிறது என்றும் கூறுகிறார். சாதியை ஒழிக்க குறைந்தபட்ச சீர்திருத்த நடவடிக்கைகளாக அம்பேத்கர் பரிந்துரைத்த கலப்பு மணத்திற்கே இங்கு கடும் எதிர்ப்பு நிலவுகிறது.ப லியல் நோய்களும் ஒழுக்கக்கேடும் உள்ள ஒருவனால்கூட அவன் பிறப்பால் பூசுரன் என்பதால் அர்ச்சகனாக முடிகிறது. சமூக சீர்திருத்தவாதிகள் மட்டுமல்ல, சோசலிச சமுதாயத்தை உருவாக்க விரும்பும் மார்க்சியவாதிகளும்கூட பதில் சொல்ல வேண்டிய கூர்மையான கேள்விகளை எழுப்புகிறது இந்த நூல். நன்றி: இந்தியா டுடே, 25/6/2014.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *