ஜெயந்திசங்கர் சிறுகதைகள்
ஜெயந்திசங்கர் சிறுகதைகள், ஜெயந்திசங்கர், காவ்யா, சென்னை, பக். 965, விலை 880ரூ.
சிறுகதை, சமகால நிகழ்வுகளைப் பதிவு செய்யும் சமூக இலக்கியம். அவசர உலகில் பயணிக்கும் இன்றைய தலைமுறையின் ரசனைக்கு ஏற்றவாறு, இதழ்களில் ஒரு பக்க கதைகளாகப் புதிய பரிணாமம் பெற்றிருக்கும் சிறுகதையின் உலகத்தில், ஜெயந்தி சங்கரின் சஞ்சாரம் சிறுகதை இலக்கியத்துக்கான மைல் கல்லாக இருக்கிறது. வாசகன் புரிந்து கொள்ளும்படியான ஒரு படைப்பாளிக்கான இலக்கணத்தையும் முன்வைத்துள்ளது. அன்றாடம் நம் வாழ்க்கையில் பெறும் அனுபவங்களை, இவரது கதைகளின் மூலம் மீண்டும் நாம் பெற முடிகிறது. அங்கங்கே சந்திக்கும் மனிதர்களையும் திரும்பவும் நாம் சந்திக்க முடிகிறது. சிங்கப்பூர் வாசியான நூலாசிரியரின் கதைகளில் அந்த மண்ணின் தன்மை வெளிப்படுகிறது. எந்தையும் தாயும் என்ற சிறுகதையில் பெற்றோரின் பொறுப்பற்ற தன்மையால் மனம் உடைந்துபோய் இருக்கும் மாலா என்ற 8 வயது சிறுமியையும், அவளின் மனதைப் புரிந்து கொண்டு பரிவோடு நடந்துகொள்ளும் ஆசிரியரின் அக்கறையையும் அழகாகச் சித்திரித்திருக்கிறார். அதேபோல் திரை என்ற சிறுகதையில் அழகான குடும்பப் பின்னணியுடன் ஆண் வாரிசைப் பெற்றெடுத்த முகுந்த் ஹரிணி தம்பதிக்கு பெண் குழந்தை மீது ஆசை எழ, மீண்டும் கர்ப்பமாகிய ஹரிணிக்கு மறுமுறையும் ஆண்குழந்தையே பிறந்ததால் வருத்தப்படுகிற மன உணர்வையும் இங்கே பதிவு செய்திருக்கிறார். இருந்தாலும் அதையும் தாண்டி தாயின் மன உணர்வு எப்படி மேலெழுகிறது என்பதைக் கதையின் போக்கு அழகாகக் காட்டியுள்ளது. 99 சிறுகதைகளும் 3 குறுநாவல்களும் பின்னிணைப்புகளுமாக 965 பக்கங்கள் அடங்கிய இந்த நூலில் ஈரம், தையல், நுடம் போன்ற சிறுகதைகள் மிகச் சிறப்பாக இருக்கின்றன. நன்றி: தினமணி, 25/6/2014.
—-
கண் பாதுகாப்பும் உணவு முறைகளும், டாக்டர் மோகன்ராஜன், டாக்டர் சுஜாதா மோகன், விகடன் பிரசுரம், சென்னை, விலை 90ரூ.
கண் பாதுகாப்புக்கான வழிமுறைகள், கண் நோய்க்கான சிகிச்சைகள் பற்றி விரிவாகக் கூறும் நூல். கண்ணுக்கு நலம் தரக்கூடிய உணவு வகைகள் பற்றிய விவரங்கள் மிகவும் பயனுள்ளவை. நன்றி: தினத்தந்தி, 28/5/2014.