டாக்டர் உ.வே.சாவின் என் சரித்திரம்
என் சரித்திரம், டாக்டர். உ.வே. சாமிநாத ஐயர், விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை -2, விலை 275ரூ.
To buy this Tamil book online : https://www.nhm.in/shop/100-00-0000-808-2.html உத்தமதானபுரம் வேங்கடசுப்பிரமணியன் சாமிநாதன்… என்பதுதான் உ.வே.சா.வின் பெயர். உலுத்துப்போய் தீயில் வேகக் கொடுக்கப்பட்டு சாகடிக்கப்பட்ட தமிழ் இலக்கியங்களைக் காப்பாற்றியவர் என்பதால் அது காரணப் பெயரும். கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளோடு முன்தோன்றிய மூத்தகுடி என்று பழம் பெருமை பேசுவதற்கான தகுதியும் தகைசார்ந்த ஆவணங்களும் நம்முடைய முன்னோர் படைத்த இலக்கியங்கள்தான். சீவகசிந்தாமணியும், சிலப்பதிகாரமும், மணிமேகலையும், பத்துப்பாட்டும், எட்டுத்தொகையும், புறநானூறும் ஓலைச்சுவடிகளாக சமஸ்தானங்களிலும் பழைய தமிழ்ப் பண்டிதர்களது வீடுகளிலும் செல்லரித்துக்கொண்டிருந்தபோது, ஊர் ஊராக, தெருத் தெருவாக அலைந்து அவற்றைக் கைப்பற்றி அச்சு வாகனம் ஏற்றியதால்தான். உத்தமதானபுரம் என்ற கிராமத்தில் பிறந்த சாமா தமிழுக்கே தாத்தா ஆனார். இத்தகைய சிறப்பு வாய்ந்த உ.வே.சா. தன்னுடைய வாழ்க்கை வரலாற்றை ஆனந்த விகடன் இதழில் 1940ம் ஆண்டு ஜனவரி 7 முதல் வாரம்தோறும் எழுத ஆரம்பித்தார். அதை அவர் எழுதி முடிப்பதற்கு முன்பே 1942-ம் ஆண்டு ஏப்ரல் 28-ம் நாள் றைந்துவிட்டார். அதுவரை எழுதிய வரலாறே இந்தப் புத்தகம். தொடக்க காலத்தில் தமிழ் கற்பித்த சடகோபய்யங்கார் முதல் மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை வரை தன்னை எப்படி எல்லாம் செழுமைப்படுத்தினர் என்பதை உ.வே.சா-வின் வார்த்தைகளில் படிக்கும்போது அன்றை குருகுலக்கல்வியின் அருமை புரிகிறது. மதுராம்பிகையுடன் நடத்தப்பட்ட தனது திருமணம் நான்கு நாள் விழாவாக நடந்ததை வர்ணிக்கும்போது, அந்தக் காலகட்டத்தில் குடும்ப உறவுகள் சொந்தங்களின் உள்ளார்ந்த ஈடுபாடுகளை அறிந்துகொள்ள முடிகிறது. நீ ஒரு காரியத்துக்கும் பிரயோஜனப்படமாட்டாய் என்று மகனை கொட்டி இருக்கிறார் அப்பா. ஆனால் அவரே மகனின் தமிழ் ஆர்வத்தைப் பார்த்து நல்ல ஆசான்களிடம் கொண்டுபோய் பாடம் படிக்கத் துடியாய் துடித்தும் இருக்கிறார். இந்த நிகழ்வுகள் அப்பா மகன் பாசத்தில் அன்றைய வெளிப்பாடுகளாக இருக்கிறது. அனைத்துக்கும் மேலாக சாமிநாதனின் தமிழ் வெறிதான் இந்தப் புத்தகம் மொத்தமும் இருக்கிறது. குடும்பத்தில் பலர் சமஸ்கிருதம் படிக்கச் சொல்கிறார்கள். ஆசிரியர்கள், இவரை ஆங்கிலத்தின் பக்கமாகத் திருப்புகிறார்கள். இசைத்தேர்ச்சி பெற்றவராக இவரை வளர்க்க வேண்டும் என்பதற்காக தெலுங்கு மொழியைப் படிக்கத் தூண்டுகிறார் அப்பா. அனைத்தையும் நிராகரித்து தமிழின் பக்கம் வருகிறார் சாமிநாதர். எனக்கு ஒன்றுதான் நாட்டம்… தமிழ்தான் எனக்குச் செல்வம், அதுதான் என் அறிவுப்பசிக்கு உணவு. எவ்வளவுக்கெவ்வளவு நான் அதன் தொடர்பை அதிகப்படுத்திக் கொள்கிறேனோ அவ்வளவுக்கவ்வளவு எனக்கு உத்ஸாகம். நல்லது செய்தோமென்ற திருப்தி, லாபமடைந்தோமென்ற உணர்ச்சி உண்டாகின்றன. அன்றும் சரி, இன்றும் சரி இந்த நிலைமை மாறவே இல்லை என்று எழுதுகிறார் உ.வே.சா. விருத்தாசலம் ரெட்டியாரிடம் தமிழ்ப் பாடம் கேட்ட காலம் முதல் இறுதி நாள் வரை அவரது தமிழ்த் தேடுதல் குறையவில்லை. ஆர்வம் மங்கவில்லை. தனக்கென ஒரு திருக்குறள் புத்தகம் வேண்டும் என்பதற்காக பல மைல்கள் நடந்துபோய் ஒருவரிடம் வாங்கி வந்திருக்கிறார். உ.வே.சா. ஓலைச்சுவடிகளைக் கைப்பற்ற நடந்துநடந்து போயிருக்கிறார். அன்று அவர் கால்தேய நடந்ததால்தான் இன்று பழந்தமிழ் இலக்கியங்கள் நம் கைகளை அலங்கக்கின்றன. அந்த மகானைப் படிப்பது அவருக்குச் செலுத்தும் மகத்தான மரியாதை. – புத்தகன். நன்றி – ஜுனியர் விகடன், 24 பிப்ரவரி 2013.