நல்லறம் வளர்த்த வள்ளல் பச்சையப்பர்

நல்லறம் வளர்த்த வள்ளல் பச்சையப்பர், எஸ். பரதன், பக் 174, திருமதி மருதேவி பரதன் அறக்கட்டளை, 2980, Z பிளாக், அண்ணாநகர், சென்னை 40, விலை 150ரூ.

ஒருவர் தனது வாழ்நாள் முழுவதும் நல்லறம் வளர்ப்பதையே நோக்கமாகக் கொண்டு செயலாற்ற முடியும் என்பதற்கு வள்ளல் பச்சையப்பரின் வாழ்வே ஓர் உதாரணம்…

அதுவும் நாற்பதே ஆண்டுகள் (1754-1794) இவ்வுலகில் வாழ்ந்த ஒருவர், இத்தனை அறச்செயல்கள் ஆற்றியிருப்பது வியக்கத்தக்கது. குறிப்பாக, கல்விக்கும் ஆன்மிகத்துக்கும் அவர் வழங்கியுள்ள கொடைகள் சமூகப் பயன்பாடு மிக்கதும், காலத்துக்கும் அவர் புகழை நிலைநிறுத்துவதுமாகும். துபாஷி என்று சொல்லப்படுகின்ற இருமொழியாளராக அரசுப் பணியில் இருந்த பச்சையப்பர் தான் செல்லும் ஊர்களில் எல்லாம் தனது அறப்பணியைத் தொடர்ந்துள்ளார். சிதம்பரம், சீர்காழி, திருவரங்கம், திருவானைக்காவல், மதுரை, அழகர்கோயில் போன்ற ஊர்களில் மட்டுமல்லாது, வாரணாசி (காசி)யில் கூட இவருடைய அறக்கட்டளை அமைக்கப்பட்டுள்ளது. தனக்குப் பின்னரும் தொடர்ந்து அறக்கட்டளைகள் சிறப்பாகச் செயல்பட விரும்பி பௌனி நாராயணப் பிள்ளையை அறங்காவலராக நியமித்தது அவருடைய தொலைநோக்குப் பார்வையைக் காட்டுகிறது.

இந்நூலைப் படிப்பதன் மூலம் பச்சையப்பர் வரலாற்றை மட்டுமல்ல, பதினெட்டாம் நூற்றாண்டில் காஞ்சிபுரம், சென்னை மற்றும் தமிழகத்தின் பல பகுதிகள் எப்படி இருந்தன என்பதையும் அறிய முடிகிறது. வரலாற்று ஆசிரியர் கே.கே. பிள்ளை குறிப்பிடுவதைப்போல தமிழரின் வாழ்வில் காஞ்சி பச்சையப்ப முதலியாரின் வாழ்க்கையும் பின்னிப் பிணைந்துள்ளது என்பது உண்மையே.

நன்றி – கல்கி, 4 நவம்பர் 2012.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *