டாவின்சி கோட்
டாவின்சி கோட், டான் பிரவுன், தமிழில் பெரு. முருகன், இரா. செந்தில், எதிர் வெளியீடு, பொள்ளாச்சி, விலை 599ரூ.
To buy this Tamil book online: http://www.nhm.in/shop/1000000023804.html அறிவின் புதிர்களைத் தேடி பாரிசில் உள்ள லூவ்ர் அருங்காட்சியகத்தில் அதன் மேற்பார்வையாளர் ஜாக்குவஸ் கொலை செய்யப்படுகிறார். அவர் இறக்கும் நேரத்தில் தனது வயிற்றில் ரத்தம் கொண்டு சில சின்னங்களையும் ரகசிய எண்களையும் எழுதிவைத்து இறக்கிறார். அவர் விடுத்திருந்த புதிரை அவிழ்க்க மத அடையாளங்கள் மற்றும் குறியீடுகளை ஆராயும் சரித்திரப் பேராசிரியர் ராபர்ட் லாங்டன் அழைக்கப்படுகிறார். கொல்லப்பட்ட ஜாக்குவஸின் பேத்தி சோபியா ராபர்ட் லாங்டன் மீது காவல்துறையினரின் சந்தேகம் திரும்புவதை அறிந்து அவரைத் தப்பிக்க வைக்கிறார். ஒரு கொலையில் ஆரம்பிக்கும் சஸ்பென்ஸ் கதை கிறிஸ்தவ சமயம் என்ற நிறுவனம் சொல்லும் கதைக்கு பெண்ணிய ரீதியிலான மாற்றுக்கதையை சுவாரசியமான முறையில் முன்வைக்கிறது. 2003ல் ஆங்கிலத்தில் வெளியான இந்நாவல் உலகம் முழுவதும் ஒரு கோடி வாசகர்களால் படிக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. கிறிஸ்தவ மத வரலாற்றையும் ஐரோப்பிய ஓவிய வரலாற்றையும் தவறாகச் சித்தரிப்பதாகவும் டாவின்கோட் விமர்சிக்கப்பட்டது. பல்வேறு உள் இணைப்புகள், விடுபுதிர்கள் மற்றும் மர்மங்களோடு புத்திசாலித்தனமான ஆய்வுத் தரவுகளையும் கொண்ட நாவல் என்று விமர்சகர்களால் புகழப்படுகிறது. கிறிஸ்துவின் கடைசி இரவு விருந்து ஓவியத்தில் ஏந்திருக்கும் கோப்பை மற்றும் மேரி மக்தலீனா தொடர்பாக இருக்கும் மர்மங்களைத் தனது நாவல் வழியாக புதிரவிழ்கிறார் டான் பிரவுன். கத்தோலிக்க மத குருமார்களால் உலகம் முழுவதும் எதிர்க்கப்பட்ட இப்படைப்பு 44 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ஹாலிவுட்டில் ரான் ஹோவேர்டால் திரைப்படமாகவும் எடுக்கப்பட்டுள்ளது. இந்த சஸ்பென்ஸ் திரில்லர் நாவலை அதன் சுவாரசியம் குன்றாமல் தமிழில் பெரு. முருகன் மற்றும் இரா. செந்தில் ஆகியோர் மொழிபெயர்த்துள்ளனர். எதிர் வெளியீடு இந்தப் புத்தகத்தைச் சிறப்பாக வெளியிட்டுள்ளது. தமிழில் அறிவார்த்தமான பிறமொழி வெகுஜனப் படைப்புகள் வருவதற்கு இதுபோன்ற நூல்கள் தூண்டுதலாக இருக்கும். -வினு பவித்ரா. நன்றி: தி இந்து.