தகவல் சுரங்கம்

தகவல் சுரங்கம் (இரு நூல்கள்), லக்ஷ்மிவேல், ராஜாத்தி பதிப்பகம், சென்னை, விலை தலா 40ரூ.

நாட்டில் அதிகரித்து வரும் வீட்டு வாடகையை பார்க்கும்போது, சொந்தமாக ஒரு குடிசை வீடு கட்ட கையளவு நிலமாவது வாங்க வேண்டும் என்ற எண்ணம் எல்லோருடைய மனதிலும் எழுவது இயற்கை. அதற்காக பல வருடம் கஷ்டப்பட்டு குருவி சேர்த்தாற்போல் பணத்தை சேர்த்து ஒரு இடத்தை வாங்கிய பின், அதில் வில்லங்கம் முளைத்தால், பெரும் ஏமாற்றமாகிவிடும். எனவே நிலம் வாங்குவது, விற்பது குறித்த முழுமையான விபரங்களை அறிவது மிக முக்கியம். குறிப்பாக ஒரு நிலத்தில் என்னென்ன விதமான வில்லங்கங்கள் இருக்கும். அதற்கான தீர்வு என்ன? அரசு அங்கீகார வீட்டு மனையை கண்டறிவது எப்படி? நிலத்தின் மார்க்கெட் வேல்யூ அறிவது எப்படி என்று நிலம் குறித்த A to Z  வரையிலான விபரங்களை எளிய கேள்வி பதில் வடிவில் இந்நூல் விளக்குகிறது. அதேபோல் இப்பதிப்பகத்தின் இதே தலைப்பிலான இன்னொரு நூல், பெண்களுக்கான சொத்துரிமையைப் பற்றி முழுமையாக விளக்குகிறது. தவிர, பத்திரம் எப்படி எழுதுவது, பட்டாவில் பெயர் மாற்றம் செய்வது எப்படி, ஏடி கண்டிஷன் பட்டா, டி கார்டு பட்டா, தனிப்பட்டா, கூட்டுப்பட்டா ஆகியவை பற்றிய விளக்கம், பொதுசேவைக்கு நிலத்தை அரசு எடுத்தால் என்ன செய்வது. ஜப்தி குறித்த முழுமையான தகவல்கள், நில பரிவத்தனை விளக்கம் என்று சொத்துப் பதிவு முதல் ஜப்தி வரை அனைத்து விபரங்களும் இந்நூலில் கேள்வி பதில் வடிவில் விளக்கப்பட்டுள்ளன. சிறிய நூல்களாக இருந்தாலும் நிலம் குறித்து ஊஷாராக இருக்க வேண்டிய சுலபமான வழிகளைக் கூறும் நூல்களாக உள்ளன. -பரக்கத். நன்றி: துக்ளக், 2/4/2014.  

—-

புனிதப் பயணம் ஒரு அமெரிக்க சுவாமியின் சரிதம், ராதாநாத் சுவாமிகள், தமிழில்-பி.கே. சம்பத், துளசி புக்ஸ், பக். 488, விலை 225ரூ.

ரிச்சர்ட் ஸ்லேவின் என்கிற 19 வயது இளைஞன், 1970களில் அமெரிக்காவின் சிகாகோ நகரிலிருந்து இந்திய ஆன்மிகத்தைத் தேடி இமயமலைக்குச் சென்று இந்தியத் தத்துவ ஞானிகளிடம் உறவாடி, இந்தியத் தத்துவ ஞானத்தைக் கைவரப் பெற்று, துறவில் ராதாநாத் சுவாமிகள் என்ற திருநாமத்தோடு, ஆன்மிக உலகில் உலா வந்து கொண்டிருக்கிற துறவியின் சுயசரிதை நூல்தான் இந்நூல். இந்தியாவின் ஆன்மிக சாம்ராஜ்யத்தை அடைய, அவர் எடுத்துக் கொண்ட முயற்சி நம்ப முடியாத நிகழ்சியாக இருக்கிறது. ஆன்மாவை அவர் நேருக்கு நேர் பார்த்த அனுபவம் பற்றி, அவரது பதிவுகள், நம்மை வியக்க வைக்கின்றன. ஒரு சாதகன், விடா முயற்சியுடன் ஆன்மாவைத் தேடி, பிறகு தேடலின் முடிவில் ஞானியாக முடியும் என்பதை நிரூபித்துக் காட்டிய சுயசரிதை நூல் இந்நூல். புனிதப் பயணம் ஒரு அற்புதமான ஆன்ம ஞானத்தை பக்தி யோகம் என்ற அக்னிப் பரீட்சையில் தன்னை உட்படுத்தி, துறவறத்தின் தூய்மையை, முழுதாய் பெற்ற ஒரு யோகியின் சுயசரிதை நூல். படிக்கப் படிக்க, நம்மை பரவசத்தில் ஆழ்த்துகிறது இவ்ஞானப் பனுவல். கிழக்கு நோக்கிப் புனிதப் பயணம், அன்னை இந்தியா, இமாலயத்தின் புனிதப் பயணம், கருணை மிக்க கானகம், முடிவுரை என்ற தலைப்புகளில் ஒரு நாவல் போல பல சாகச நிகழ்வுகளோடு சுயசரிதை நூல் நிறைவடைகிறது. பக்தி மார்க்கம் வழியாக, ஆன்ம ஞானத்தைப் பெற்ற தவயோகியாக இன்றைக்கு ஆசிய, ஐரோப்பா, அமெரிக்கா என, பல நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்து, பக்தி மார்க்கத்தைப் போதித்து வருகின்ற தவநெறிச் செல்வர். இத்தகைய இவரது சுயசரிதை நூல் ஒரு ஞானக் கருவூலம். -குமரய்யா. நன்றி: தினமலர், 6/4/2014.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *