தஞ்சை ப்ரகாஷ் சிறுகதைகள்
தஞ்சை ப்ரகாஷ் சிறுகதைகள், பொன். வாசுதேவன், டிஸ்கவரி புக் பேலஸ், பக். 488, விலை 400ரூ.
புலன் விசாரணையில் தெரியாத புதிர்கள் ‘இரண்டாம் வகுப்பிலேயே பாட்டியிடம் இலக்கணம் படித்தேன்’ என்ற பிரகாஷின் முகப்பு வரிகளுக்குப் பின், தொகுப்பின் கதைகள் துவங்குகின்றன. முப்பத்தியொரு கதைகளைக் கொண்ட இந்தத் தொகுப்பைப் படிக்கும்போது, அதை நம்பித்தான் ஆகவேண்டும். கதையின் இரண்டாம் வாக்கியத்துக்குப் போகும்போதே, வாசகர்கள் எங்கே நின்று, கதை மாந்தர்களைத் தொடரவேண்டும் என, கடிவாளம் கட்டி விடுகிறார் பிரகாஷ். வாசகர்களுக்குத் தான் கடிவாளமே தவிர, கதை மாந்தர்களுக்கு இல்லை. போக்கிடம் இல்லாதோர்கூட, கதைகளில் போய்ச் சேரும் இடத்தைப் பார்க்கும்போது மெலிதான மிரட்சி உண்டாகும். தமிழின் நவீன இலக்கிய வகைமையில் பல்வேறு வட்டராங்கள் தனித்தனியாக பதிவு ஏற்படுத்தியது கண்கூடு. ‘மனிதன் வரலாற்றின் குழந்தை’ எனும் அடிப்படையில், பிரகாஷுக்கு அலாதியான ஒரு தனிப் பிரதேசம் வாய்த்தது. அதை அவர் படைப்புகளில் மேற்கொண்ட விதமோ வினோதமானது. அந்த வினோதமே இன்றைய படைப்புலகிலும் அவரது தாக்கம் இருக்குமாறு – அவர் அமரரான போதிலும் – அவரது இருப்பை நிறுவுகிறது. இன்றைய தலைமுறை நம்பவியலாத வன்முறையும், எப்போதுமுள்ள பாலியலும் பால்யமும், இதில் பதிவாகியுள்ளன. நரம்புகளின் ஆழத்தின் துக்கம், எப்போதாவது மேற்பரவி அதிரும், அவ்வப்போது இதில். ‘காலம் அவனை உடைத்ததேயொழிய மறுபடி வார்க்க முடியவில்லை’ (பக். 37). வாசகருக்குக் கடிவாளமிட்டுக் கதைக்குள் இழுத்த மாந்தர்கள் சமயாசமயங்களில் எழும்பி மிதக்க ஆரம்பிப்பார்கள். அதனாலேயே அவரது பாத்திரங்கள், மண்ணில் கால் பாவுவதில்லை என்னும் ஆவலாதி, அவர் மேல் உண்டு. அவர் சமயங்களில், வீடுகளையே அப்படி மிதக்க விடுவார் என்பதால், அவர் மீதான இந்தப் பிராது சிறிதுதான். தஞ்சை பிரகாஷின் கதைகளில் மிதப்பதும், நின்று தரிப்பதும், புலன் விசாரணைக்கு அப்பாற்பட்டனவாகவே உள்ளன. அதல பாதாளத்துக்கும், ஆகாச மேகத்துக்கும் இடையே சுழலும் ராட்டினம் போன்ற இந்தக் கதைகள், நல்ல வாசிப்பு, யோசிப்பு அனுபவத்தைக் கொடுக்கும். இந்தக் கதைகளை கவிஞரும், எழுத்தாளருமான பொன்.வாசுதேவன் தொகுத்துக் கிரமப்படுத்தியுள்ளார். தொகுப்பு என்பது சவாலான பணி. இந்த சவாலில் பொதிந்துள்ளது, வாசகரின் அதிர்ஷ்டமும் எழுத்தாளனின் காலமும். -க.சீ. சிவக்குமார். நன்றி: தினமலர், 24/1/2016.