தடைகளும் விடைகளும்
தடைகளும் விடைகளும், முரு.பழ.ரத்தினம் செட்டியார், சைவ சித்தாந்த வாழ்வியல் ஆய்வு மையம், 3, அண்ணாநகர், சோளிங்கர் 631102, பக். 306, விலை 120ரூ.
சைவ சித்தாந்தத்தின் வழியில், பல்வேறு வடிவில் எழுப்பப்படும் சமயம் தொடர்பான 250 கேள்விகளுக்கான விடைகள் இந்த நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. கேள்விகள் இரு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. முதல் பகுதியில் அருள் அறம், உலக நலம், ஊழ்வினை, பழக்க வழக்கங்கள், தெய்வமாடி, பேயகள், மந்திரங்கள், சித்துகள், வழிபாடு, புராணக் கதைகள் உள்ளிட்ட 10 தலைப்புகளில் கேள்விகள் தொகுக்கப்பட்டுள்ளன. பால் குடிப்பது தீமையா, வட்டி வாங்கி அறம் செய்தல் தகுமா, தோல் செருப்பு அணியவது சரியா, சித்துகள் வீடுபேறு அடையத் தடையா உள்ளிட்ட கேள்விகளும் அவற்றுக்கான பதில்களும் முதல் பகுதியில் உள்ளன. அம்மைநோய், சுடுகாடு, திருக்குறள், இறைவன், ஐந்தெழுத்து, உயிர்கள் உள்ளிட்ட தலைப்புகளில், மறுபிறப்பு குறித்த கேள்விகள், காதணி விழாச் சடங்கு, காவடி எடுப்பது, திருமணம், வீடுகட்டுதல் ஆகியவற்றில் உள்ள சடங்குகளின் போதான ஐயங்களும் அவற்றுக்கான விளக்கங்களும் என விரிந்துள்ளது இந்தப் பகுதி. சமய முறை வழிநடத்தலில் ஏற்படும் ஐயங்களுக்கு அருமையான விளக்கங்களைத் தந்துள்ளார் மலேசிய மண்ணில் வாழ்ந்து சைவப்பணி ஆற்றிய இந்நூலின் ஆசிரியர். நன்றி: தினமணி 4/3/2013.
—-
கம்ப நாடன் மாட்சி மிக்க கவிஞனா? வீழ்ச்சியுற்ற மனிதனா?, துரை. வி. ராக. தன. பாகதாசன், அரங்கேற்றம், சாஸ்தா அடுக்கு இல்லம், வெங்கடேசுவரா நகர், பொழிச்சலூர், சென்னை 74, விலை 75ரூ.
கம்ப ராமாயணம் இயற்றிய கம்பனின் பெருமைகள் குறித்தும், அவருடைய இறப்பு குறித்தும் விளக்கும் வழக்காடு நாடகம்தான் இந்த புத்தகம். கம்ப ராமாயணத்தில் நூறு பாடல்களுக்கு ஒருமுறை சடையப்ப வள்ளலை புகழ்ந்து கம்பர் எழுதினார். இதனால் ஆத்திரமடைந்த சோழ மன்னன் குலோத்துங்கன் கம்பரை பழிவாங்கும் நோக்கத்துடன் ஒரு சூழ்ச்சி செய்கிறான். தாசிக்கு இந்த கம்பன் அடிமை என்று மோகனா என்ற தாசியிடம் கம்பன் எழுதிய ஓலைச்சுவடியை வைத்து அவரை நாட்டை விட்டே துரத்துகிறார்கள். இதனால் அவருக்கு ஏற்பட்ட அவமானங்கள் மற்றும் அவருடைய மகள் இறந்தால் கம்பருக்கு ஏற்பட்ட மனவேதனைகளை நம் கண்முன் நிறத்துகிறார் ஆசிரியர் துரை. வி. ராக. தன. பாகதாசன். நன்றி:தினத்தந்தி, 22/2/2012.