தந்தை கோரியோ
தந்தை கோரியோ, பிரெஞ்சு மூலம் ஒனோரெ தெ. பல்சாக், தமிழில் ச. மதனகல்யாணி, சாகித்ய அகாடமி, பக். 433, விலை 220ரூ.
வெறுப்பெனும் பெருஞ்சரிவில் மனித இதயம் நிற்பது அருமை நெப்போலியன் கத்தியால் சாதித்ததை நான் இறகு முனையால் சாதிப்பேன் என்ற பிரெஞ்சு எழுத்தாளர் ஒனோரே தெ. பல்சாக், 150 ஆண்டுகளுக்கு முன் எழுதிய, லெ பேர் கோரியோ எனும் புதினத்தை, தந்தை கோரியோ எனும் பெயரில், எளிய நடையில் மிக நுணுக்கமாக மொழி பெயர்த்துள்ளார் பேராசிரியர் மதன கல்யாணி. மனைவியை இழந்தும், தன் இரு மகள்கள் மீதுள்ள பாசத்தால், மறுமணம் செய்து கொள்ளாமல், மிகப் பெரிய வணிகராக வாழும் கோரியோ, அவர்களை சீராட்டி, பாராட்டி வளர்த்து, பின் பெரிய இடத்தில் திருமணம் செய்து வைக்கிறார். திருமணத்திற்குப் பின், இரண்டு மகள்களுமே பாசம் என்பதைப் புறந்தள்ளி, தந்தையிடம் உள்ள பெருஞ்செல்வத்தைச் சிறிது சிறிதாக கபளீகரம் செய்வதிலேயே குறியாக உள்ளனர். செல்வத்தை பாசத்தால் பறிகொடுத்த கோரியோ, இறுதிக் காலத்தை வாடகை விடுதியில் கழிக்கிறார். மகள்கள் அப்போதும் வந்து, ஆறுதலாக நடந்து கொள்ளவில்லை. பாசத்தின் ஏக்கத்திலேயே அவர் மூச்சு பிரிய, அவரின் இறுதிச் சடங்கில்கூட கலந்துகொள்ள, மகள்கள் மறுத்துவிடுகின்றனர். அவரோடு விடுதியில் இருந்த இரு ஏழை மாணவர்கள், தம் சொந்த செலவில் சவ அடக்கம் செய்வதாக அவலச்சுவையில், நாவல் முற்றுப்பெறுகிறது. அன்றைய பாரீஸ் நாகரிகத்தில் விழுந்து சீரழியும் பெண்களையும், பாசத்திற்கு அடிமையாகி பணம், சமூக அந்தஸ்து, அனைத்தும் இழந்து அழிந்து போன ஒரு தந்தையையும் அற்புதமாக, அழகிய மொழிபெயர்ப்பில் வடித்துள்ளார் மொழிபெயர்ப்பாளர். அன்பெனும் சிகரத்திற்கு ஏறும்போது, மனிதஇதயம் கொஞ்சம் ஓய்விற்காக நிற்கும். ஆனால், வெறுப்பெனும் பெருஞ்சரிவில் அது நிற்பது அருமை. (பக். 49). லட்சம் லட்சமாய் திருடி பணக்காரனாய் இருந்தீர்களேயானால், பெரிய பெரிய இடங்களிலெல்லாம் உங்களைக் குணக்குன்று என, புகழ்ந்து, தூக்கிக்கொண்டு ஆடுவர் (பக். 88). தெய்வ நம்பிக்கை உள்ளவர்கள் நல்லதை ரகசியமாக செய்கின்றனர் (பக். 254). -பின்னலூரான். நன்றி: தினமலர், 31/8/2014.