தனித்தலையும் செம்போத்து
தனித்தலையும் செம்போத்து, செந்தி, காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில், விலை 65ரூ.
வடிகாலற்ற காமத்தை உணர்த்தும் கவிதைகள் செந்தியின் தனித்தலையும் செம்போத்து தொகுப்பு நகரமயமாதல் என்னும் விஷயத்தைத் தவிர வேறெந்த அரசியலுக்கும் முக்கியத்துவமளிக்காமல் அதைக் கவனமாகத் தவிர்த்துவிட்டது. தொகுப்பிலுள்ள கவிதைகளில் சிலவற்றில் மட்டும் இவை வெளிப்படுவதைக் காணமுடிகிறது. உதாரணமாக செங்குளத்தை இரண்டாகப் பிரித்து வளர்ந்துகொண்டே போகும் தங்க நாற்கரச்சாலை குட்டைகள் அரிதான வெளியில் கான்கிரீட் பாத்திகள் அவைகளுக்குப் பெரும் களிப்பூட்டியிருக்கால் என்ற கான்கிரீட் பாத்தி நீர் குடிக்கவரும் காக்கைகள் கவிதையைச் சொல்லலாம். தொகுப்பில் ஆண்களின் வடிகாலற்ற காமம் குறித்த கவிதைகளை நெருக்கமாக உணரமுடிகிறது. அப்படிப்பட்ட உணர்வை இளவயதில் எல்லோரும் அனுபவித்தவர்கள்தான் என்ற முறையில் சரியான வார்த்தைகளால் அவை சொல்லப்பட்டிருக்கின்றன. தத்துவார்த்தக் கேள்விகள் குறித்த கவிதைகளில் சற்றுக் குழப்பம் இருக்கிறது. இருப்பு, இடப்பெயர்ச்சி, கண்கட்டு வித்தை, தெருவைக் கடக்கும் நகுலன் ஆகிய கவிதைகளில் வெளிப்படும் தத்துவ அல்லது உளவியல் சிக்கல்கள் கவிதையைப் போலவே நம்மையும் புரிதலுக்கு வரவிடாமல் தடுக்கின்றன. மேலும் ஏற்கெனவே கவிதைகளில் கேட்கப்பட்டுவிட்ட அல்லது விவாதித்து ஓய்ந்துவிட்ட கேள்விகளை மீண்டும் சந்திக்கும்போது சற்று அலுப்படையத்தான் வேண்டியிருக்கிறது. மதுரை குறித்துப் பேசுவதற்கு இன்னமும் நிறைய விஷயங்கள் மீதமிருக்கின்ற நிலையில் செந்தியின், இரைச்சல் வீதியினை நனைத்துச் செல்லும் இசைவண்டி, தூங்கா நகரம் என்றொரு நகரமும் அதனைச் சுற்றிய சில தெருக்களும், என்கிற இரண்டு கவிதைகளுமே காட்சிகளை வெறுமனே விவரித்துப் போகின்றனவாக அமைந்துவிட்டது. சற்று ஏமாற்றம்தான். இறுதியாக இத்தொகுப்பில் சில நல்ல முயற்சிகளைக் காண முடிகிறது. அக்கவிதைகள்தான் செந்தியின் அடையாளமாகச் சொல்லப்படக்கூடிய கவிதைகளாக மாறும். கூறுகூது கூறல் தவிர்த்து செந்தி தன் படைப்புகளை எழுதுவாரேயானால் ஒரு மிகச் சிறந்த தொகுப்பை நிச்சயமாக அவரிடமிருந்து எதிர்பார்க்கலாம். நன்றி: தி இந்து, 21/5/2014.