தமிழகச் சிற்பங்களில் பெண் தொன்மம்

தமிழகச் சிற்பங்களில் பெண் தொன்மம், பெ. நிர்மலா, அலைகள் வெளியீட்டகம், 97/55, என்.எஸ்.கிருஷ்ணன் சாலை, கோடம்பாக்கம், சென்னை 24, விலை 280ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-862-8.html

கல்லில் கலை வண்ணம் கண்டவன் தமிழன். அத்தகைய சிற்பங்கள் இதுவரை கலை, இலக்கிய, வரலாற்று பூர்வமாக ஆய்வு செய்யப்பட்டுள்ளன. அவற்றைப் பெண்ணியப் பார்வையில் பார்க்கும் புத்தகம் இது. சிற்பம், தொன்மம், பெண்ணியம் ஆகிய மூன்றும் முக்கியமான துறைகள். இந்த மூன்றையும் சேர்த்துப் பார்க்கும் பார்வையை நிர்மலாவின் படைப்பு கொடுக்கிறது. கோயில் இல்லாத ஊர்கூட இருக்கலாம். சிற்பம் இல்லாத கோயில் இருக்காது. இருக்கவும் முடியாது. கோயில்களின் கருவறை, கருவறைச் சுவர், சுற்றுச்சுவர், விமானம், கோபுரம், விதானம், தூண்கள், தேவகோட்டம், மண்டபம், மண்டபத் தூண்கள், தேர்… சிற்பங்கள் கல், மண், மாக்கல், சுதை, மரம், உலோகம், தந்தம், மாட்டுக் கொம்பு, படிகம், மெழுகு ஆகிய பொருட்களால் செய்யப்படுகின்றன. இத்தகைய சிற்பங்களில் பால், பாலிய வேறுபாடு இருப்பதைச் சுட்டிக்காட்டுகிறது இவரது ஆய்வு. சிற்பம் செய்ய தேர்வு செய்யும் கல்லில் இருந்தே இந்த வேறுபாடு உருவாக்கப்படுகிறது. கல்லைத் தட்டிப் பார்த்து மணியோசை போன்ற நாதம் வந்தால் அந்தக் கல்லை ஆண் தெய்வச் சிலையையும்,,, தாளம் போன்ற ஓசையிருந்தால் அந்தக் கல்லை பெண் தெய்வச் சிலையையும் செய்வார்கள் என்று சிற்பி ரவி சொல்கிறார். சிற்பங்கள் அகலம், உயரம், ஆழம் ஆகிய முப்பரிமாணங்களைக்கொண்டது. அந்த முப்பரிமாணங்களும் பெண்ணை எப்படிப் பார்க்கின்றன? பொதுவாகவே வலது கையை உயர்வானதாகவும், இடது கையைத் தாழ்ந்ததாகவும் மதிக்கும் பழக்கம், நமக்கு இருக்கிறது. அனைத்துச் சிற்பங்களிலும் இடது பக்கமாகவே பெண் நிறுத்தப்படுகிறாள். முருகனின் வலதுபுறம் வள்ளி, நிறுத்தப்படக் காரணம், அவள் இரண்டாவது மனைவி என்பதால், ஆணின் தோளைவிட உயர்ந்தவர்களாகப் பெண் காட்டப்படவில்லை. உயரமானவளாகக் காட்டப்படும் மோகினி, ஒழுங்கீனமானவளாகக் காட்டப்படுகிறாள். தொன்மத்தில் பெண் இரவோடும், ஆண் பகலோடும் அடையாளப்படுத்தப்படுகின்றனர். இப்படி, ஏராளமான நுண்மையான கண்டுபிடிப்புகள் இதில் உள்ளன. தாய்வழிச் சமூக மரபு அழிக்கப்பட்டு, அந்த இடத்தில் வைதீக ஆணாதிக்க மரபு எப்படி எல்லாம் காட்சிப்படுத்தப்பட்டன என்கிற விவரங்கள் இந்தப் புத்தகம் முழுமையும் இருக்கின்றன. பெண் சிற்பங்கள் அழகியல் எல்லையைத் தாண்டி நிற்கும் இடங்களில் ஆணாதிக்கச் சிந்தனை தூக்கலாக இருப்பதை உணர முடிகிறது. சாதி, பொருளாதார அடிப்படையில் மட்டுமின்றி பால் அடிப்படையிலும் இந்தச் சமூகம் சமத்துவமற்றது. இது காலம் காலமாகத் தொடரக்கூடிய ஒன்றாக உள்ளது. இந்த நிலை வாழ்க்கையின் பல்வேறு தத்துவங்களிலும் செயல்பாடுகளிலும் ஊடுருவி நிற்கிறது. கோயில், கட்டட அமைப்பு, ஓவியம், சிற்பம் ஆகியவற்றிலும் இது உள்ளது. பக்தி, கலை, அழகியல் உணர்வு என்ற கண்ணோட்டத்தை மீறி சமூகத்தின் உளவியல்ரீதியான பாலியல் மதிப்பீடுகளை அவை உட்கொண்டிருக்கின்றன என்கிறார் நிர்மலா. கோயில் சிற்பங்களை மாறுபட்ட கோணத்தில் பார்க்கத் தூண்டுகிறது இந்தப் புத்தகம். -புத்தன். நன்றி: ஜுனியர் விகடன், 15/05/2013.

Leave a Reply

Your email address will not be published.