தமிழக வரலாற்றில் இருளும் ஒளியும்

தமிழக வரலாற்றில் இருளும் ஒளியும், முனைவர் செல்லன் கோவிந்தன், திருக்குறள் பதிப்பகம், 66, பெரியார் தெரு, எம்.ஜி.ஆர்.நகர், சென்னை 78, பக். 272, விலை 170ரூ.

தமிழக வரலாற்றில் இருளும் ஒளியும் என்ற, இந்த நூலினைப் படைத்துள்ள நூலாசிரியர் ஆய்வாளரா என்னும் ஐயம் தோன்றும் அளவிற்கு, இந்த நூலினைப் படைத்திருக்கிறார். சங்க இலக்கியத்தில், மனிதன் இனக் குழுவாக வாழ்ந்த காலத்துப் பாடல் துவங்கி, கி.பி. இரண்டாம் நூற்றாண்டு வரைஉள்ள பாடல்கள் தொகுக்கப்பட்டுள்ளன என்பதை, சங்க இலக்கியத்தைப் படிக்கும் எவரும் எளிதில் அறிந்துகொள்ள முடியும். இந்த நூலாசிரியர் சங்க இலக்கியத்தையே படிக்காமல், சங்க இலக்கியம் பற்றி ஆய்வு செய்திருக்கிறார். பொதும்பர் என்னும் சொல்லுக்குரிய பொருளை அறிய இயலாமல், சொல்லாய்வாளர் போலப் பொதும்பர் என்பது பல்லவர்களைக் குறிக்கும் என்று இருண்ட வரலாறு படைக்கப் புறப்பட்டிருக்கிறார். சிலப்பதிகாரத்தில் இடம்பெறும் இலங்கையிலிருந்து வந்த கயவாகுவையும், அவனது காலத்தை மறந்துவிட்டு, சிலப்பதிகாரத்தை, பதினோராம் நூற்றாண்டுக் காப்பியம் (பக். 177) என்று திட்டமிட்டே குறிப்பிடுகிறார். கோவலன் என்னும் பெயருக்குப் பொருள் கோ அல்லன் என்பது ஆகும். இவன் மன்னன் இல்லை. ஆனால், மன்னனுக்கு இணையான பெருமை கொண்டவன், என்பதை உணர்த்தும் பெயர் என்பதை விளக்கிக் கொள்ள இயலாமல் புலம்பியிருக்கிறார். சிலப்பதிகாரத்தில் இடம்பெறாத கயவாகு வேந்தனைக்காட்டி, சிலப்பதிகாரத்தைஇரண்டாம் நூற்றாண்டு என்றுகூறுகிறார்கள் என்று ஏளனம் செய்திருக்கிறார் இந்த நூலாசிரியர். (பக். 180) சிலப்பதிகாரத்தின் வரந்தரு காதையைப் படித்திருந்தால் (உ.வே. சாமிநாதய்யர் பதிப்பு), அதில் இடம்பெற்றுள்ள கயவாகு (அடி160) என்னும் பெயரைப் படித்திருப்பார். எதைப் புரிந்துகொண்டு படிக்கும் ஆற்றல் இல்லாத, இவர் ஆய்வாளர்என்னும் போர்வையை போர்த்திக் கொண்டு நூல் படைப்பது சரியல்ல. -முகிலை ராசபாண்டியன். நன்றி: தினமலர், 1/4/2012.

—-

 

பொது அறிவு வினா விடை, பிரேமா அரவிந்தன், குமரன் பதிப்பகம், 19, கண்ணதாசன் சாலை, (பாலாஜி கல்யாண மண்டபம் அருகில்), தி.நகர், சென்னை 17, பக். 96, விலை 30ரூ.

பொது அறிவு புத்தகம் என்றாலே பொதுவாக, நம் நாட்டின் தலைநகரம் என்ன, தேசியப் பறவை எது என்பது போன்ற பொதுவான அனைவருக்கும் தெரிந்த கேள்விகளே இடம் பெறும். ஆனால், இதிலிருந்து இந்நூல் வேறுபட்டு, பாலபாரதி இலக்கிய இதழை வெளியிட்டவர் வ.வே.சு.ஐயர். காகிதத்திலான பணம், இந்தியாவில் வெளிவந்த ஆண்டு 1952, அக்தா புயல் தாக்கிய நாடு எது? அமெரிக்கா 2010, செங்கொடி தீக்குளித்தது, 28 ஆகஸ்ட் 2011 என, பல்வேறு சமகால அரசியல் நிகழ்வுகளைக் கூட உள்ளடக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. -ஆரா. நன்றி: தினமலர், 1/4/2012.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *