தமிழர் நெல்
தமிழர் நெல், ஓம் பதிப்பகம், சென்னை, பக். 64, விலை 60ரூ.
தமிழர்களின் உணவு, கலாச்சாரம், விழாக்கள் போன்ற அனைத்திலும் நெல்லும் அரிசியும் ஒன்றாகக் கலந்திருப்பதைத் தவிர்க்க முடியாது. பாரம்பரியமான அந்த அரிசி அன்று நோய் எதிர்ப்பு சக்தி மிக்கதாய் இருந்தது. இன்று சர்க்கரை வியாதி உள்ளிட்ட பல வியாதிகளுக்குக் காரணமாகிவிட்டது. அதற்குக் காரணம். இரசாயன உரம், பூச்சிக்கொல்லி மருந்துகள்தான். இவற்றால் நம் பாரம்பரிய அரிசியின் தன்மைகெட்டு, நோய்க்கான இடமாக இக்கால அரிசி மாறிவருவதைச் சுட்டிக்காட்டுவதோடு, இன்றும் நம்மிடம் உள்ள பாரம்பரிய அரிசிகள் எவை, அதனை எப்படி சமைப்பது, அதில் உள்ள மருத்துவ குணங்கள் உள்ளிட்டவற்றை விளக்கமாகக் கூறி நம்மை ஆரோக்ய வாழ்வு வாழ வழிகாட்டும் நூல். நன்றி: குமுதம், 2/2/2015.
—-
ரியல் எஸ்டேட் A to Z, குமுதம் பு(து)த்தகம், சென்னை, விலை 80ரூ.
குமுதத்தில் கிரவுண்ட் ஃப்ளோர் என்ற தலைப்பில் வாரந்தோறும் வந்த ரியல் எஸ்டேட் பற்றிய கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். ஒரு வீடு வாங்கும்போது என்னென்ன செய்ய வேண்டும் நிலங்களில் உள்ள சிக்கல்களை எப்படித் தெரிந்து கொள்வது, பாத்திரப்பதிவின்போது நாம் மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள், மூலப்பத்திரத்தின் அவசியம், பவர்ஆஃப் அட்டர்னி மூலம் வீடு, நிலம் வாங்கும்போது நாம் கவனிக்க வேண்டியவை, வீடு, நிலம் வாங்க வங்கிகள் மூலம் எப்படி கடன் வாங்குவது, அதற்கு உண்டான சான்றிதழ்களை நாம் எப்படி தயாரிப்பது? வீட்டின் அளவு நிலத்தின் பரப்பில் நடக்கும் தில்லுமுல்லுகள், அதை எப்படி எளிதில் கண்டுபிடிப்பது? பட்ஜெட் வீடு வாங்க என்ன செய்ய வேண்டும்? கட்டடத்தின் அளவில் ஏதாவது பிரச்னை இருந்தால் எப்படி சரி செய்வது? பட்டா இல்லாத நிலத்தை வாங்கும்போது ஏற்படும் சிக்கல்கள், உங்களுக்கான உரமைகள், பில்டருக்கான தகுதிகள் என்று ஒன்றுவிடாமல் சொல்லித் தருகிறார் அன்வர். மொத்தத்தில் புதுவீடு, நிலம் வாங்க முனைவோர் இந்நூலைப் படித்தாலே போதும். ஒரு வீடு வாங்குவது உறுதி. -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 2/2/2015.