தமிழிசைக் களஞ்சியம் (7 தொகுதிகள்)

தமிழிசைக் களஞ்சியம் (7 தொகுதிகள்), மு. ஆபிரகாம் பண்டிதர், பதிப்பாசிரியர்-மு. அங்கயற்கண்ணி, வளவன் பதிப்பகம், 2, சிங்காரவேலர் தெரு, தியாகராய நகர், சென்னை 17, விலை 4875ரூ.

தமிழிசை விழாக்களில் இறை வணக்கத்துக்கு முன்னதாகப் போற்றப்பட வேண்டியவர் மு. ஆபிரகாம் பண்டிதர். கதை உபாத்யாயராக வாழ்க்கையைத் தொடங்கி இசை வல்லுநராக மறைந்து (1859-1919) போனவர். மொழி தெரியாமல் பாடல்கள் பாடுவதை உணர்ந்த இவர், 96 தமிழ்ப் பாடல்களை இயற்றிக் கொடுத்தார். தியாகராஜர், சியாமா சாஸ்திரிகள், முத்துசாமி தீட்சிதர் ஆகியோரின் தெலுங்கு மற்றம் வடமொழிப் பாடல்களையும், புரந்தரதாசரின் கன்னடப் பாடல்களையும் தமிழ்நாட்டு மேடைகள் ஒலித்த நிலையில் இவரது 96 தமிழ்ப் பாடல்கள் கொண்ட கருணாமிர்த சாகரத் திரட்டு என்ற நூல் 1907ல் வெளியானது. அதன் பிற்கு கருணாமிர்த சாகரம் 4 தொகுதிகள் வெளிவந்தன. இவை புத்தகங்களோடு நின்றுவிடக் கூடாது என்பதற்காக தொடர்ச்சியாக இசை மாநாடுகளையும் நடத்தினார். இந்தப் புத்தகங்கள் தான் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தொகுப்பாக வெளிவந்துள்ளது. தமிழுக்கும் இசைக்கும் பல்லாண்டு கால தொடர்பு உண்டு. அகத்தியம் தொடங்கி சிலப்பதிகாரம் வரை இசை பற்றி பேசிய நூல்களும் ஏராளம் உண்டு. 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆதி இசை தமிழில் உண்டு என்பதும் நிறுவப்பட்டுள்ளது. இவை அனைத்தையும் நடைமுறைப் பயிற்சியுடன் சேர்த்து பயிற்றுவிக்க முன்வந்தார் ஆபிரகாம் பண்டிதர். சொற்பிழை, சுரப்பிழை, தாளப்பிழை இல்லாமல் பாடல்களை பாட வேண்டும் என்று விரும்பிய அவரே பல பாடல்களை இயற்றி பாடும் திறமை கொண்டவராக இருந்தார். மற்ற மொழி இசையைவிட தமிழிசையே சிறந்தது என்று அந்தக் காலத்திலேயே பரோடா மன்னர் அரண்மனை சென்று வாதிட்டவர் இவர். தன்னுடைய இசைப் புலமையை தமிழ் உணர்வோடு சேர்த்து கருணாமிர்த சாகரத் திரட்டு, கருணாமிர்த் சாகரம் என இரண்டு படைப்புகளை வெளியிட்டார். இசை உலகுக்கு மட்டுமல்ல, தமிழ் இன உணர்வுக்கும் ஆபிரகாம் பண்டிதர் வழங்கிய கொடை இது. தமிழ் மொழியின் சிறப்பு, தொன்மை குறித்தும் பண்டிதர் ஏராளமாக எழுதி இருக்கிறார். மேலும், இசை என்றால் பாடகர்கள் மட்டுமே அடையாளம் காணப்படுகிறார்கள். ஆனால் சங்கீத பரம்பரையில் சொல்லாமல் விடப்பட்ட பலரை, பண்டிதர்தான் வெளிச்சத்துக்குக் கொண்டுவந்தார். இசைக் கலையை உயிராகப் போற்றி வறுமை போன்ற இன்னல்களுக்கு மத்தியில் வளர்ந்து வாழவைத்த ஓச்சர், அண்ணாவிகள், நாகசுரக்காரர், தவில்காரர், மிருதங்கக்காரர், வீணைக்காரர், காந்தர்வகள், தேவதாசிகள், நடன மாந்தர்கள் என எல்லா வகுப்பரையும் சம தளத்தில் அழைத்து வந்து உட்கார வைக்கிறார். தமிழுக்கும் இசைக்கும் பெரும் சொத்து இந்த தமிழிசைக் களஞ்சியம். -புத்தகன். நன்றி: ஜுனியர் விகடன், 19/1/2014.

Leave a Reply

Your email address will not be published.