தமிழில் முதல் சிறுகதை எது
தமிழில் முதல் சிறுகதை எது, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, விலை 40ரூ.
எழுத்துலகில் புகழ் பெற்ற டாக்டர் ஆர்.எஸ். ஜேக்கப் தமிழில் வந்த முதல் சிறுகதை எது? எழுத்தாளர் யார்? என்பதை பல்வேறு கோணங்களில் ஆராய்ந்து எழுதியிருக்கும் இந்த நூல் சிறுகதை இலக்கியத்தின் பெருமைக்குரிய பக்கங்கள். 1877ம் ஆண்டில் கிறிஸ்தவ பாதிரியார் சாமுவேல் பவுல் ஐயர் எழுதிய சரிகைத் தலைப்பாகை தான் தமிழில் எழுதப்பட்ட முதல் சிறுகதை என்பதை காரண, காரியங்களுடன் விவரிப்பவர், அதைக் கூட ஆய்வாளர்களின் பார்வைக்கே விட்டுவிடுகிறார். தகுதிக்கு மீறிய ஆசை நல்ல தல்ல என்பது இந்த சிறுகதையின் சாரம். உலகச் சிறுகதைகளில் உன்னதமான முதல் சிறுகதை பைபிளில் இயேசுநாதர் சொன்ன கெட்ட குமாரன் கதையே என்று குறிப்பிடும் அவர் இயேசுநாதரின் உவமைக் கதைகளே சிறுகதைக்கு மூலாதாரம் என்பதையும் தெளிவுபடுத்துகிறார். நூலாசிரியர் ஆகாமல் போன அரிசி சிறுகதையும், கிறிஸ்தவ பாதிரியாரின் சரிகை தலைப்பாகை சிறுகதையும் நூலில் இடம் பிடித்திருப்பது வாசகர்களுக்கு கிடைத்த இலக்கிய போனஸ். நன்றி: தினத்தந்தி, 26/3/2014.
—-
திருவாசகர் திருமந்திரம், அருள்நிதி எஸ்.எஸ். வாசன், திருவாசர் யோகமந்திர் ஆத்மஞான சபை, சென்னை, விலை 300ரூ.
யோகக் கலையின் மூன்று அங்கங்களாகிய தியானம், யோகம், மற்றும் இயற்கை மருத்துவம் போன்றவற்றை முறையாக அறிந்துகொள்ளும் வகையில் இந்நூல் வெளிவந்துள்ளது.
பல நூல்களில் கூறப்பட்ட யோக ஜால ரகசியங்களின் கருத்துக்கள் இந்த நூலில் விளக்கி கூறப்பட்டுள்ளது. உடல் நலம் பேணும் ஆரோக்கிய ரகசியத்தை நூலில் ஆசிரியரே கற்று உணர்ந்து எழுதியிருப்பது நூலுக்கு சான்றாக உள்ளது. நன்றி: தினத்தந்தி, 26/3/2014.
—-
சிவன் சுவை தமிழ்ப்பாடல்கள், மேகதூதன் பதிப்பகம், சென்னை, விலை 70ரூ.
எழுத்தாளரும், நாடக ஆசிரியரும், சின்னத்திரை நடிகருமான ஜி. சுந்தரேசன் எழுதியுள்ள ஆன்மிக நூல் சிவன் சுவை தமிழ்ப்பாடல்கள். சிவனைப் பற்றியும் அறுபத்து மூன்று நாயன்மார்கள் பற்றியும் அவர் எழுதியுள்ள கருத்தாழம் மிக்கப் பாடல்கள் இந்நூலில் அடங்கியுள்ளன. ஆன்மிகத்தில் ஆர்வம் கொண்டவர்கள் வாசிக்க வேண்டிய புத்தகம். நன்றி: தினத்தந்தி, 26/3/2014.