தமிழைப் பழித்தவருக்கு சாட்டையடி
தமிழைப் பழித்தவருக்கு சாட்டையடி, தமிழ்ப் பேராயம், திரு. இராமசாமி நினைவுப் பல்கலைக்கழகம், காட்டாங்குளத்தூர் 603203, காஞ்சிபுரம் மாவட்டம், விலை 120ரூ
தொல்லியல் ஆராய்ச்சியாளரான இரா. நாகசாமி ஆங்கிலத்தில் ஒரு புத்தகம் எழுதியுள்ளார். தமிழையும் சமஸ்கிருதத்தையும் காட்டும் கண்ணாடி (The Mirror of Tamil and Sanskrit) என்பது அந்த நூலின் பெயர். தமிழ் தனித்தன்மையுடன் வளரவில்லை என்றும், சமஸ்கிருத சொற்களைக் கடன் வாங்கியே வளர்ந்தது என்றும் இந்த நூலில் அவர் குறிப்பிட்டுள்ளார். பொதுவில் வடமொழியை உயர்த்தியும், தமிழைத் தாழ்த்தியும் இந்த நூலில் எழுதப்பட்டுள்ளது. இதற்கு பதிலடி கொடுக்கும்வண்ணம், தமிழறிஞர் தமிழண்ணல் இரா. நாகசாமியின் பழுதடைந்த கண்ணாடியும், பார்வைக் கோளாறுகளும் என்ற தலைப்பில் சிறந்த புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார். தமிழின் சிறப்பு குறித்து, மேல்நாட்டு அறிஞர்களே வியந்து புகழ்ந்து எழுதியிருப்பதை எல்லாம் சுட்டிக்காட்டி இருக்கிறார். தமிழின் சிறந்த இலக்கியங்களை வட நாட்டினர்தான் களவாடியுள்ளனர் என்பதை ஆதாரங்களுடன் எடுத்துக்காட்டுகிறார். தமிழ்ப் பகைவர்களுக்கு சாட்டையடி கொடுக்கும் விதத்தில் நூலை எழுதியுள்ள தமிழண்ணலுக்கு தமிழகம் கடமைப்பட்டுள்ளது. நன்றி: தினமணி,20/10/2013.
—-
என்ன வளம் இல்லை நம் திருநாட்டில்? அமெரிக்க பயணக் கட்டுரை, என்.சி. மோகன்தாஸ், குமுதம் பு(து)த்தகம், விலை 160ரூ.
அனைவரும் அறிந்த எழுத்தாளர் என்.சி. மோகன்தாஸ். தான் அமெரிக்கா சென்று வந்த அனுபவங்களை எளிதாக எழுதியிருக்கிறார். இந்திய மண்ணின் வாசனையில் ஊறிய எண்ணங்களோடு அமெரிக்காவை காட்டுகிறார். மெரிலாண்ட் சிவா விஷ்ணு கோவிலில் உள்ள ரெஸ்டாரண்டில், அமெரிக்கன் ஒருவன் லாவகமாக தோசை வார்ப்பதையும், துளை வடை சுடுவதையும் எழுதியிருப்பதைப்போல, பல விஷயங்களை இதில் காணலாம். தினமலர் வாரமலர் தொடர் கட்டுரையாக வந்த விஷயங்கள் தற்போது நூலாக மலர யார் காரணம் என்பதையும் முன்னுரையில் தெரிவித்த வெளிப்படை பாங்கு சிறப்பானது. மொத்தத்தில், ஆசிரியரின் அமெரிக்க பார்வை வித்தியாசமானது. நன்றி: தினமலர், 20/10/2013.