தமிழ்க் காதல்
தமிழ்க் காதல், முனைவர் வ. சுப. மாணிக்கம், மல்லிகா, 6, பொன்னியம்மன் கோவில் தெரு, ஆலந்தூர், சென்னை 16, பக்கங்கள் 415, விலை 200ரூ
முனைவர் வ. சுப., என தமிழ் கூறும் நல்லுகம் அழைத்து மகிழ்ந்த தமிழறிஞர் வ.சுப. மணிமகனார் அவர்கள். பேராசிரியர் பெருமகனார் சென்னை பல்கலைக்கழகத்தின் முனைவர் பட்டத்திற்கு சமர்ப்பித்த ஆங்கில நூலின் முடிவுகளை விரிவாகவும், விளக்கமாகவும் பல ஆய்வுக் குறிப்புகளையும் இணைத்து தமிழில் இந்நூலினை தந்துள்ளார். அகத்திணை ஆராய்ச்சி, அத்திணை பாகுபாடு, அகத்திணை தோற்றம், அகத்திணை குறிக்கோள், அகத்திணை பாட்டு, அகத்திணை புலவர்கள், அகத்திணை கல்வி என அகத்திணை துறையை சங்கப் பாடல்களை கருவாய் வைத்து ஓர் அற்புதமான ஆய்வுகளை இந்நூலில் பதிவு செய்துள்ளார். 2, 381 சங்கப் பாடல்களுள் 1,863 பாடல்கள் அகத்திணை சார்ந்த பாடல்கள். இப்பாடல் ஒவ்வொன்றிலும் ஆண் பெண் உள்ளங்கள் உள்ளன. இப்பாடல்களை கற்பவர் 3,727 காதல் உள்ளங்களை பற்றிய உணர்வும், அறிவும் பெறுவர் என ஆழ ஆய்ந்து வடித்துத் தந்துள்ள ஆய்வு நூல். அகத்துறை சார்ந்த ஆய்வில், இதுநாள் வரை வெளிவராத பல அரிய செய்திகளை இந்நூலில் பதிவு செய்துள்ளார். எல்லா உயிர்க்கும் இன்பம் என்பது தானமர்ந்து வருவும் மேற்வற்றாகும் என்ற தொல்காப்பியர் நெறி சார்ந்தது. – குமரய்யா.
—-
துணைவேந்தர் சொல்லும் செயலும், முனைவர் மு. பொன்னவைக்கோ, சேகர் பதிப்பகம், 66, பெரியார் தெரு, எம்.ஜி.ஆர் நகர், சென்னை 78, பக்கங்கள் 180,விலை 150ரூ.
இந்நூலின் ஆசிரியர் முனைவர் மு. பொன்னவைக்கோ, நல்ல தமிழ் ஆர்வலர், கவிஞர், பேராசிரியர், பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர். அவர் தம் பெற்றோர் இட்ட பெயராகிய ரத்தின சபாபதி என்பதை தமிழ்ப் பற்றின் காரணமாக மாற்றிக் கொண்டவர். துணைவேந்தராக பொறுப்பேற்றிருந்தபோது அவர் நிகழ்த்திய சாதனைகளை குறிப்பிட்டுள்ளார். இந்த நூலை படிப்போர் அதை அறிந்து வியப்பெய்துவர் என்பது திண்ணம். பாரதிதாசன் பல்கலைக்கழகத்திலும் அதனுடன் இணைவுபெற்ற கல்லூரிகளிலும் தமிழை ஆட்சிமொழியாக்கினார். அலுவலக மடல்களை தமிழிலேயே அனுப்பச் செய்தார். ஆங்கிலத்தில் வந்த கடிதங்களை திருப்பி அனுப்பி தமிழிலேயே எழுதச் செய்தார். இச்செயல் ஏற்கப்பட்டு, பாராட்டப் பெற்றது. இணையதளத்தை தமிழ், ஆங்கிலம் ஆகிய இருமொழிகளிலும் வடிவமைக்க ஆவன செய்தார். நன்றி: தினமலர். 04 மார்ச் 2012.