தமிழ்ச் சூழல்களில் ஆய்வும் அரசியலும்
தமிழ்ச் சூழல்களில் ஆய்வும் அரசியலும், மீண்டும் பாடம் கேட்கிறேன், பேராசிரியர் ஆ. சிவசுப்பிரமணியனுடனான ந. முத்துமோகனின் நேர்காணல்கள், தொகுப்பாசிரியர்-ந.முத்துமோகன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை, பக். 196, விலை 160ரூ.
பேராசிரியர் ஆ. சிவசுப்பிரமணியனை ஓர் ஆய்வாளர் மார்க்சிய தத்துவத்தை ஏற்றுக் கொண்டு செயல்படுபவர் – தமிழ் இலக்கியங்களில் ஆர்வமும், புலமையும் உடையவர் – மனித உரிமை சார்ந்த பல்வேறு இயக்கங்கள், கலை, இலக்கிய அமைப்புகள் ஆகியவற்றில் தொடர்புடையவர் என்று மட்டும் குறுக்கிப் பார்த்துவிட முடியாது. மனித வாழ்வு சார்ந்த பல்வேறு துறைகளின் மீது ஆர்வமும் செயல்பாடுகளும் உடையவர் அவர். அது இந்நூலில் வெளிப்பட்டிருக்கிறது. பேராசிரியர் ஆ. சிவசுப்பிரமணியனுடன் ந. முத்துமோகன் மேற்கொண்ட ஒன்பது நேர்காணல்கள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. இந்நேர்காணல்களில் அரசியல், இலக்கியம், சமூக மாற்றம், ஆராய்ச்சி என பல்துறை சார்ந்த, ஆ. சிவசுப்பிரமணியனின் தெளிவான, உறுதியான கருத்துகள் ஒளி பாய்ச்சுகின்றன. பொதுவுடைமை இயக்கத்தின் பல்வேறு நடைமுறை சார்ந்த பிரச்னைகள் குறித்து ஆ. சிவசுப்புரமணியனின் அனுபவமிக்க கருத்துகள் இன்றைய காலத்தின் தேவையை நிறைவு செய்பவை. தாமரை இதழை தி.க.சி. வளர்த்தவிதம், அதில் எழுதிய எழுத்தாளர்கள், தொ.மு.சி.ரகுநாதனின் பஞ்சும் பசியும் நாவல் குறித்து ஆ. சிவசுப்பிரமணியத்தின் அதிரடியான விமர்சனம், இன்றைய முற்போக்கு இலக்கிய அமைப்புகளின் போக்கு, அவற்றின் நடைமுறை, சாதனைகள், பின்னடைவுகள், நவீன தமிழிலக்கியங்களைப் பற்றி போதுமான ஆய்வுகளின்மை என சமகாலப் பிரச்னைகள் பற்றி எல்லாம் இந்நூல் பேசுகிறது. கடந்த 60 ஆண்டுகால தமிழ்கூறும் நல்லுலகத்தின் வாழ்க்கையை பிரச்னைகளைப் பற்றி யோசிக்க வைக்கும் நூல். நன்றி: தினமணி, 7/7/2014.
—-
நாடகங்கள், கே.ஏ.குணசேகரன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை, விலை 310ரூ.
சத்திய சோதனை, வெளிச்சம், அறிகுறி என 18 தலைப்புகளில் எழுதப்பட்ட நாடகங்கள் கொண்ட நூல். நன்றி: தினத்தந்தி, 9/7/2014.