தலைமறைவு காலம்

தலைமறைவு காலம், யவனிகா ஸ்ரீராம், நற்றிணை பதிப்பகம்.

விடுதலைக்கு பின் மிஞ்சியது என்ன? யவனிகா ஸ்ரீராம் எழுதிய தலைமறைவு காலம் என்ற கவிதை நூலை சமீபத்தில் படித்தேன். நற்றிணை பதிப்பகம் வெளியிட்டுள்ளது. நவீனத்துவம், பின் நவீனத்துவம் பற்றிய கவிதைகள் இவை. நவீனத்துவம் மற்றும் பின் நவீனத்துவம் பற்றி புரியாத பலவற்றை, மக்கள் மத்தியில் கொண்டு செல்ல, இந்த கவிதை நூலாசிரியர் தலைமையில், இளம் கவிஞர்கள் செயல்படுகின்றனர். மக்கள் குவியும் பொது நிகழ்வுகள், புத்தக கண்காட்சிகளில் இவர்களின் கவியரங்க மேடை பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. விடுதலைக்கு முன் இந்தியா, விடுதலைக்காக காந்தி நடத்திய போராட்டம், ஆங்கிலேயர்களிடம் பெற்ற விடுதலை என, தொடரும் கவிதை ஒன்று, இப்போதைய நிலையை சொல்கிறது. தலைமறைவு காலம் நூலில், விடுதலை வாழ்வில் பாலாறும், தேனாறும் ஓடும் என எண்ணினேன். ஆனால் மிஞ்சியது வாடகை வீடும், மனைவியும், சில தட்டுமுட்டு சாமான்களும்தான் என நடுத்தர குடும்பத்தினர் கூறுவதாக அந்த கவிதை உள்ளது. நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ள ஆறு வழிச்சாலையில், ஓட்டை உடைசலான அரசு பேருந்து ஒன்று சொல்கிறது. அதில், கூட்டம் பிதுங்கி வழிகிறது. சாலை அமைக்க நிலத்தை இழந்த கிழவர் ஒருவர், ஜன்னல் ஓரம் அமர்ந்துகொண்டு வழிநெடுகப் பார்த்துக் கொண்டே வருகிறார். அவர் இறங்கும் இடம் வந்ததும் தட்டுத் தடுமாறி கூட்டத்திலிருந்து தப்பித்து இறங்கி, தன் ஊரை தேடிச் செல்கிறார். அவருடன் இறங்கும் ஊசி விற்பவன், எந்த கவலையும் இல்லாமல், அவன் வணிகத்தை கவனிக்க, கூவிக்கொண்டே செல்கிறான். தன் பயணத்தைத் தொடரும் அந்த பழைய பேருந்து, தனக்கு சற்றும் பொருந்தாத அந்த ஆறு வழிச் சாலையில், அது வழக்கமாக சென்ற கிராமங்களைத் தேடிக் கொண்டே செல்கிறது. ஆனால், கண்ணுக்கெட்டிய தூரம் வரை, எந்த கிராமத்தையும் அதனால் கண்டுபிடிக்க முடியவில்லை. அடிப்படை வசதிகள் மேம்பட்ட அளவுக்கு அதற்காக உடைமைகளை இழந்தவர்களின், வாழ்வு மேம்படவில்லை என்பதை, இந்த கவிதை உணர்த்துகிறது. -ஜெயதேவன், கவிஞர். நன்றி: தினமலர், 19/7/2015.

Leave a Reply

Your email address will not be published.