தித்திப்பான தொகுப்புமுனைகள்
தித்திப்பான தொகுப்புமுனைகள், தொகுப்பாசிரியர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ், புத்தொளிப் பதிப்பகம், பக். 168,விலை 80ரூ.
ஒருவர் ஒரு மத நம்பிக்கையில் ஆழமான பிடிப்பில் இருக்கையில், ஏதோ ஒரு திருப்பு முனையால் வேறொரு மதச் சித்தாந்தங்களால் ஈர்க்கப்படும்போது, அவருக்கு ஒரு சிந்தனை மாற்றம் நிகழ்ந்து, மதமாற்றம் ஏற்படுகிறது. இதுவே இயற்கையானது. நிலையானது. மற்றபடி உலக ஆதாயங்களைக் காட்டி, மூளைச்சலவை செய்து ஏற்படும் மதமாற்றம் செயற்கையானது. நிலையற்றது என்கிறார் இந்நூலாசிரியர். பேராசிரியர், சட்டமன்ற உறுப்பினர், ஆன்மிகம், அரசியல், பேச்சு, எழுத்து, சமூகநலன்… என்று பல தளங்களிலே பயணிக்கும் இந்நூலாசிரியர், மாற்று மத பிரபலஸ்தர்கள் சிலருக்கு இஸ்லாமிய சித்தாங்கள் ஏற்படுத்திய திருப்புமுனைகளையும், அதன் விளைவாக அவர்களிடம் நிகழ்ந்த மத மாற்றங்களையும், அதற்கான காரண காரியங்களையும் சம்பந்தப்பட்டவர்களே கூறியவற்றைத் தொகுத்து இந்நூலை உருவாக்கியுள்ளார். பெரியாரின் நாத்திகக் கொள்கைக்கு பிரச்சார பீரங்கியாகச் செய்லபட்ட பெரியார்தாசன், கேரளாவின் பிரபல ஆங்கில எழுத்தாளர் கமலாதாஸ், ஜெர்மனியைச் சேர்ந்த எம்.டி.வி.யின் நிகழ்ச்சி தொகுப்பாளர் கிறிஸ்டியானி, இந்திய கம்பூனிஸ்ட் கட்சியின் கொடிக்கால் செல்லப்பா, பிரிட்டனின் முன்னாள் பிரதமர் டோனி பிளேரின் மைத்துனியும், பத்திரிகையாளருமான லாரன் பூத், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா… இப்படி 21 பிரபலஸ்தர்களின் பேட்டிகள் மற்றும் அவர்களின் அனுபவங்கள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொருவரின் வியப்பூட்டும் வெவ்வேறான அனுபவங்கள் படிக்க ஆர்வத்தைத் தூண்டுகின்றன. -பரக்கத். நன்றி: துக்ளக், 9/9/2015.