நாடாளுமன்றத்தின் கதை
நாடாளுமன்றத்தின் கதை, அருணகிரி, குமுதம் பு(து)த்தகம், பக். 408, விலை 240ரூ.
உலகின் பல நாட்டு நாடாளுமன்றங்களுக்கும் சென்று அவற்றின் செயல்பாடுகளைக் கண்டறிந்த இந்நூலாசிரியர், நமது நாடாளுமன்றத்தை பற்றி ஏ டு இசட் வரையிலான அனைத்து தகவல்களையும் இந்நூலில் எளிய தமிழ் நடையில் பதிவு செய்துள்ளார். இவற்றில் பெரும்பாலானவை நாடாளுமன்றம் மற்றும் இந்தியத் தேர்தல் ஆணையத்தின் ஆவணங்களில் இருந்து திரட்டியவை. இந்தியா சுதந்திரம் பெற்ற காலத்தில் இந்தியர்கள் படிப்பறிவு அற்றவர்கள், அவர்களுக்கு தேர்தல், ஓட்டு, ஜனநாயகம் பற்றியெல்லாம் என்ன தெரியும்? என்று ஐரோப்பியர்களால் கேலி பேசப்பட்ட நாம், இன்று அனைத்து நாடுகளும் பாராட்டத்தக்க வகையில் உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடாகத் திகழ்கிறோம். இத்தகைய பெருமையை எப்படி அடைந்தோம்? பிரம்மாண்டமாகத் திகழும் நமது பாராளுமன்ற கட்டிடமும், ஜனாதிபதி மாளிகையும் யாரால், எப்போது, எப்படி கட்டப்பட்டன, இந்தியாவை உருவாக்கிய சட்டங்கள், இந்திய மாநிலங்கள் அமைந்த கதை, இந்திய அரசியல் சட்டம் உருவான விதம், இந்தியத் தேர்தல் ஆணையம் மற்றும் தேர்தல் நடைமுறைகள், நாடாளுமன்ற நடைமுறைகள், கேபினட் அமைச்சர்களுக்கும், இணையமைச்சர்களுக்கும் உள்ள வேறுபாடுகள். நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான உரிமைகள், உலக நாடுகளின் நாடாளுமன்றங்கள் குறித்த தகவல்கள், ஐ.நா. சபை குறித்த தகவல்கள்… இப்படி நூற்றுக்கணக்கான தகவல்கள் புள்ளி விபரங்களுடன் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. அரசியல் ஆர்வமுடைய அனைவருக்கும் இந்நூல் ஒரு நல்ல வழிகாட்டியாக இருக்கும். -பரக்கத். நன்றி: துக்ளக், 23/9/2015.