நினைவுகள் நிறைந்த வெற்றிடம்
நினைவுகள் நிறைந்த வெற்றிடம், ஜி. மீனாட்சி, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், விலை 100ரூ.
மனக்காயங்களுக்கு மருந்து 12 சிறுகதைகள் அடங்கிய இந்த நினைவுகள் நிறைந்த வெற்றிடம் நூலில் உள்ள ஒவ்வொரு சிறுகதையும் ஒவ்வொரு பிரச்னையை அலசுகிறது. குறிப்பாக பதின் பருவத்து குழந்தைகளின் உளப்பூர்வமான சிக்கலை எடுத்துவைப்பதில் தம் கவனத்தைச் செலுத்தியிருக்கிறார் ஜி. மீனாட்சி. பிறவிப் பெரும்பயன் என்ற கதையில் ஒரு தம்பியின் தியாகத்தையும் அக்காவின் பாசத்தையும் அடி ஆழம்வரை சென்று படம்பிடித்துக் காட்டியிருக்கிறார். புதிய பாடம் என்ற கதையில் கிராமத்திலிருந்து கணவனை இழந்து மகனே கதியென நகரத்துக்கு வந்த அம்மாள் எப்படித் தன்னை நகரத்துக்கு ஏற்ப மாற்றிக்கொள்கிறாள் என்பதைக் காட்டியிருக்கிறார். அன்பு அம்மாவுக்கு, பாப்பு எழுதறேன் கதையில் ஒரு வித்தியாசமான உத்தியைக் கையாண்டிருக்கிறார். கடிதம் மூலமாகவே முழு கதையையும் நகர்த்திச் சென்றிருக்கிறார். இந்த நூலுக்கு முன்னுரை எழுதிய பிரபஞ்சன், ஜி. மீனாட்சி தன் பார்வையில் படுகிற நேர்காணல்களை எழுதுகிறார். வழுக்கள் களையப்பட வேண்டும் என்கிறார். சரிகளைப் பாராட்டவும் செய்கிறார். எல்லாம் கெட்டுப்போச்சி சார் என்று கெட்டவர்களே சொல்கிறார்கள். எல்லாம் கெடவில்லை, கெடக்கூடாது என்று சொல்லவே எழுதுகிறார்கள், எழுத்தாளர்கள். ஜி. மீனாட்சி அந்த ரகம் என்கிறார். நீரோடை நடையில், யதார்த்தமான கதாபாத்திரங்களின் மூலம் படிப்போர் மனக்காயங்களுக்கு மருந்திடும் இந்தக் கதைகள் பல பத்திரிகைகளில் பிரசுரமாகி வாசகர்களால் படித்து, ரசித்து நூலுரு பெற்றிருக்கின்றன. நன்றி: கல்கி, 13/9/2015.