திராவிட இயக்கமும் கலைத்துறையும்
திராவிட இயக்கமும் கலைத்துறையும், டாக்டர் மு. இராமசுவாமி, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், பக். 74, விலை 70ரூ.
நாடகக் கலை எதிர்கொண்ட கலகங்கள் வரலாற்று ரீதியாக, தமிழ் சமூகத்தில் நடந்த முக்கிய மாறுதல்களை பற்றி பேசுகிறது இந்த புத்தகம். கலைகளின் தாக்கம், தமிழ் சமூகத்தில் எப்படி நிகழ்ந்தது என்பதை மிகத் தெளிவாக ஆராய்கிறது. குறிப்பாக நாடகங்களின் சாயல், அவற்றின் வெளிப்பாடு, அவை சமூகத்தில் ஏற்படுத்திய தாக்கம் அல்லது மாற்றம் குறித்த தகவல்கள், கடுமையான உழைப்பின் மூலம் தொகுக்கப்பட்டுள்ளன. திராவிட அரசியல், கம்யூனிச அரசியல் போன்றவை, தமிழர்களிடம் நாடகக் கலைகள் ஊடாக பரவிய விவரம் விவரிக்கப்பட்டுள்ளது. அத்துடன், பிரிட்டிஷ் ஆட்சியில் நாடகங்களுக்கு இருந்த தடை பற்றிய விவரங்களும் கொடுக்கப்பட்டு உள்ளன. நாடகக்கலை, கலகங்களை எதிர்கொண்டு எப்படி தன்னை நிலைநிறுத்திக்கொண்டது என்பதை, நுட்பமாக பதிவு செய்துள்ளார் ஆசிரியர். அனைத்து பதிவுகளும் ஆதாரங்களுடன் உள்ளன. தமிழக வரலாற்று உருவாக்கத்தில் நாடகக்லை ஏற்படுத்திய கலகங்களையும், நாடகக்கலை எதிர்கொண்ட கலகங்களையும் பதிவு செய்துள்ள முக்கிய புத்தகம். -அமுதன். நன்றி: தினமலர், 6/7/2014.
—-
ஹர்ஷர், அ. கணேசன், விகடன் பிரசுரம், பக். 336, விலை 130ரூ.
To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-186-1.html கி.பி. 606 முதல் 41 ஆண்டுகள், ஆட்சி செலுத்தியவர் ஹர்ஷர். ரத்னாவளி, பிரியதர்சிகா, நாகானந்தம் என்ற முப்பெரும் இலக்கியங்களை எழுதியதால், ஹர்ஷரின் புலமை விளங்கும். இவரது ஆட்சியில் நிலவரி நீக்கப்பட்டது. பெற்றோரை வணங்க தவறினால் அது குற்றம் என அறிவிக்கப்பட்டு, அதற்கு அபராதமும் விதிக்கப்பட்டது. உயிர் கொலை தடை செய்யப்பட்டு, புலால் உண்ணுவதற்கு தண்டனை தரப்பட்டது. மது, சூது, புலால் ஆகியவை மன்னிக்க முடியாத குற்றமாக்கப்பட்டு தண்டனைகள் வழங்கப்பட்டன. மருந்து, உணவு, நீர், உடை ஆகியவற்றை எல்லா மதப்பிரிவினருக்கும் அளித்தார். இவை எல்லாம், சீனப் பயணி, யுவான் சுவாங், ஹர்ஷர் பற்றியும், அவரது ஆட்சி பற்றியும் கூறியுள்ளவை. நேபாளம், இவரது ஆட்சிக்கு உட்பட்டு இருந்ததாக இந்த நூலில் கூறப்படும் வரலாற்று செய்தி, வியப்பு அளிக்கிறது. -முனைவர் மா.கி. ரமணன். நன்றி: தினமலர், 6/7/2014.