திருக்குறளை மெய்ப்பிக்கும் மறக்க முடியாத 100 வரலாற்று நிகழ்ச்சிகள்
திருக்குறளை மெய்ப்பிக்கும் மறக்க முடியாத 100 வரலாற்று நிகழ்ச்சிகள், முனைவர் எஸ். சந்திரா, நர்மதா பதிப்பகம், சென்னை, விலை 55ரூ.
உள்நாடு, வெளிநாடு என்று பல கணித அறிவியல் மாநாடுகளில் கலந்துகொண்டு அறிவியல் கட்டுரைகளை சமர்ப்பித்துள்ள இந்நூலாசிரியர், தமிழ் இலக்கிய ஆராய்ச்சிகளிலும் ஈடுபட்டு இவ்விரு துறைகளிலும் பல நூல்களை வெளியிட்டுள்ளார். நம் வாழ்க்கையில் நடக்கும் பல நிகழ்ச்சிகளை உற்று நோக்கினால், வள்ளுவன் கூறிய ஏதாவது ஒரு குறளுடன் ஒத்துப் போவதை அறியலாம். அந்த அளவிற்கு எக்காலத்திற்கும் பொருந்தும் வகையில் திருக்குறளைப் படைத்திருக்கிறார் திருவள்ளுவர். அதை மெய்ப்பிக்கும் வகையில் பிரபலமான பலரின் வாழ்க்கையில் நடந்த மறக்க முடியாத, சுவாரஸ்யமான நூறு நிகழ்ச்சிகளை, அதற்குரிய நூறு திருக்குறளுடன் ஒப்பிட்டு கூறுகிறார். 1935ல் நடந்த ஒலிம்பிக் விளையாட்டில் அமெரிக்காவைச் சேர்ந்த ஜெஸ்ஸி ஓவன்ஸ் என்பவர் வெற்றி பெற்று புதிய சாதனை படைத்தார். அதற்கு அப்போட்டியில் கலந்து கொண்ட இன்னொரு போட்டியாளர் கூறிய ஆலோசனையே காரணம் என்பதை, முதல் கட்டுரையில் அதற்குரிய திருக்குறளுடன் விளக்குகிறார் ஆசிரியர். இப்படி மகாத்மா காந்தி, அம்பேத்கார், ஸ்ரீ ராமகிருஷ்ணர், பாரதியார், பேரறிஞர் பெர்னாட்ஷா என்று பலரது வாழ்க்கைச் சம்பவங்கள் படிக்க சுவையாக உள்ளது. மாணவர்களுக்கு மட்டுமல்ல, ஆசிரியர்கள், பெற்றோர்கள், கட்டுரையாளர்கள், மேடைப் பேச்சாளர்கள் என்று அனைவருக்கும் பயன்தரத்தக்க நூல் இது. -பரக்கத். நன்றி: துக்ளக், 28/5/2014.