திருக்குறள் புதுக்கவிதை வடிவில்
திருக்குறள் புதுக்கவிதை வடிவில், காவ்யா, சென்னை, விலை 900ரூ.
கடவுள் மனிதனுக்குச் சொன்னது கீதை. மனிதன் கடவுளுக்குச் சொன்னது திருவாசகம். மனிதன் மனிதனுக்குச் சொன்னது திருக்குறள். மனிதன் மகோன்னத நிலையடையும் நெறிகளையும் அறங்களையும் அழகாக சொன்னது திருக்குறள். அத்திருக்குறளுக்கு உரைநடையில் விளக்கம் எழுதியவர்கள் பலர். சிலரது உரை சாமான்யர்களுக்கு புரிவது கடினம். அதனால் உரைநடையை வேறொரு கோணத்தில் புதுக்கவிதை வடிவத்தில் கொடுத்தால் அனைவரும் படித்து இன்புறுவர் என்றெண்ணி இந்நூலை படைத்துள்ளார் நூலாசிரியர் கி.ரா. கிருஷ்ண பிரசாத். நன்றி: தினத்தந்தி, 23/4/2014.
—-
பகதூர்கான் திப்பு சுல்தான், விகடன் பிரசுரம், சென்னை, விலை 120ரூ.
வெள்ளையர்களை எதிர்த்துப் போராடிய மாவீரர்களில் முக்கியமானவர் திப்பு சுல்தான், தமிழ்நாட்டுக்கு வீரபாண்டிய கட்டபொம்மன் எப்படியோ அப்படி கர்நாடகத்துக்கு திப்பு சுல்தான். அவருடைய வாழ்க்கை, திருப்பங்கள் நிறைந்தது. அதனால்தான் அவர் வாழ்க்கையை திரைப்படமாகவும் தொலைக்காட்சித் தொடராகவும் தயாரித்து வெற்றி பெற்றார்கள். மாவீரன் திப்பு சுல்தான் வரலாற்றை வேகமும், விறுவிறுப்பும் கலந்த நடையில், ஆதாரபூர்வமாக எழுதியுள்ளார் டி.கே. இரவீந்திரன். திப்பு சுல்தான் பற்றி அவதூறான பொய்ப் பிரசாரங்கள், வெள்ளையர்கள் செய்து வந்தனர். தக்க ஆதாரங்களுடன், அவை பொய் என்று நிரூபித்திருக்கிறார் இரவீந்திரன். நன்றி: தினத்தந்தி, 23/4/2014.