துருவ நட்சத்திரம்
துருவ நட்சத்திரம், லலிதாராம், சொல்வனப் பதிப்பகம், பெங்களூர், பக். 224, விலை 150ரூ.
இசை தொடர்பான தரமான கட்டுரைகளை வெளியிடுவதில், சொல்வனம் இணைய இதழின் பங்கு மகத்தானது. இசை நுட்பம் குறித்த தேர்ந்த புரிதலும், அதை சுவாரசியமாகச் சொல்வதிலும் நேர்த்தி பெற்ற எபத்தாளர் லலிதாராம். லயம் என்ற தலைப்பில் சொல்வனத்தில், அவர் எழுதிய மிருதங்கம் தொடர்பான இசைக்கட்டுரைகளும், பழனி சுப்ரமணிய பிள்ளை குறித்த மேலும் பல அரிய விஷயங்களும் சேர்ந்து, உருவாகியிருக்கிறது இந்த புத்தகம். இது பழனி சுப்ரமணிய பிள்ளையின் வாழ்க்கை வரலாறாக மட்டுமில்லாமல், மிருதங்கம் குறித்தும, மிருதங்கம் வாசிப்பதின் வழிகள் குறித்தும், புதுக்கோட்டை பாரம்பரியத்தின் வரலாறு குறித்தும் பேசுகிறது. பழனி சுப்ரமணிய பிள்ளையின் பங்களிப்பை முழுமையாக உணர, அவரது தனிப்பட்ட வாழ்க்கையும் வாசிப்பும் மட்டும் போதாது. அவர் வாசித்த வாத்தியம், அதன் வரலாறு, அவருக்கு முன்னால் மிருதங்கத் துறையில் இருந்த நிலை, அவர் வாசிப்பை பாதித்தவர்கள், அவரது சமகாலத்தினர் ஆகியவற்றை வைத்து பார்க்கும்போதுதான் முழுமையான பார்வை கிடைக்கும். இவற்றை எல்லாம் இந்த நூல் முழுமையாக பதிவு செய்திருக்கிறது. இந்த நூலுக்கான அடித்தளமாக, பிள்ளையுடன் நேரில் பழகியவர்களின் நேர்காணல்களே அமைந்துள்ளது. -விஜயலட்சுமி சிவகுமார். நன்றி: தினமலர், 21/12/2014
—-
உலகச் சாதனையாளர்கள் 101, பழனியப்பா பிரதர்ஸ், சென்னை, விலை 410ரூ.
உலகப் புகழ்பெற்ற 101 சாதனையாளர்களின் வாழ்க்கை வரலாறுகளைக் கொண்ட நூல். விஞ்ஞான வித்தகர்களான தாமஸ் ஆல்வா எடிசன், மேரி கியூரி, ரைட் சகோதரர்கள், சர்.சி.வி.ராமன், ஐஸ்டீன், பில்கேட்ஸ் மற்றும் சத்ரபதி சிவாஜி, சுவாமி விவேகானந்தர், ரவீந்திரநாத் தாகூர், மகாத்மாக காந்தி, ஜவஹர்லால் நேரு, நேதாஜி, நெல்சன் மண்டேலா, மகாகவி பாரதியார், மூதறிஞர் ராஜாஜி, பெரியார் ஈ.வே.ரா., அன்னை தெரசா, எம்.எஸ். சுப்புலட்சுமி ஆகியோரும் இந்த 101 பேர்களில் அடங்குவர். தெளிந்த நீரோடை போன்ற நடையில் இந்நூலை எழுதியுள்ள ப. முத்துகுமாரசாமி பாராட்டுக்குரியவர். சிறந்த கட்டமைப்புடன் நூல் வடிவமைக்கப்பட்டுள்ளது. நன்றி: தினத்தந்தி, 24/12/2014.