துரோகம் வெட்கமறியாது
துரோகம் வெட்கமறியாது, தெ. சுந்தரமகாலிங்கம், வெண்ணிலா பதிப்பகம், விருதுநகர், பக். 176, விலை 140ரூ.
சிற்றிதழ்கள், இலக்கிய மாத இதழ்கள், தினசரிகள் என்று ஒன்றுவிடாமல், கலை, இலக்கிய, சமூகம் சார்ந்த கட்டுரைகளுக்கு நூலாசிரியர் ஆற்றிய எதிர்வினைகளின் தொகுப்பே இந்நூல். குறிப்பாக தீராநதி, உயிர்மை, காலச்சுவடு இதழ்களில் இவரது எதிர்வினைகள் அதிக கவனம் பெற்றிருக்கின்றன. தமிழ் எழுத்துரு குறித்த ஜெயமோகனின் கட்டுரைக்கு எழுதப்பட்ட எதிர்வினை, விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் தொடர்பாக என்.ராம் அளித்த பேட்டிக்கான எதிர்வினைகள், கலைஞர் கருணாநிதியின் அரசியல் துரோக நிகழ்வுகள், முல்லை பெரியாறு, தமிழ் ஈழம் குறித்த வாதங்கள், மரண தண்டனை குறித்த சர்ச்சை என எந்த விஷயமாக இருந்தாலும் தனக்கான கருத்தை உருவாக்கி அதற்கான நடுநிலையான எதிர்வினையை ஆற்றிய துணிச்சல் பாராட்டுக்குரியது. அந்த வகையில் இந்நூல் பல உண்மைகளை நம்மோடு பகிர்ந்துகொள்கிறது. நன்றி: குமுதம், 18/6/2014.
—-
அநலெயோ, சாய் சுந்தரராஜன், வாதினி, சென்னை, பக். 72, விலை 99ரூ.
அஜந்தா, நட்டை லெக்ரோ, யோசிகே ஆகிய நான்கு கடிகாரங்களின் கதைததான் அநலெயோ என்ற குழந்தைகளுக்கான இக்கதை நூல். மணி என்ன? என்று தெரிந்து கொள்ளமட்டும்தான் கடிகாரம் என்று நாம் நினைத்துக்கொண்டிருக்கிறோம். அதையும் தாண்டி கடிகார உலகிற்குள் நம்மை அழைத்துச் சென்று கடிகாரத்திற்குள் இவ்வளவு விஷயமா என்று நம்மை பிரமிக்க வைக்கிறார் ஆசிரியர். அதுவும் கதை சொல்லும் பாணியில் குழந்தைகளுக்கு அறிவியலைப் புகட்டியிருப்பது புது உத்தி. மனிதனுக்கும் கடிகாரத்திற்குமான உறவு, முக்கியத்துவம் கதையாகச் சொல்லும்போது மனதிற்குள் கூடுதலாகப் பதிவாகிறது. நன்றி: குமுதம், 18/6/2014.